தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட அரசியல் கூட்டம் இன்று கல்முனை சனச சமாச மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது கட்சியின் நோக்கு இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தரத்தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே. அதற்காக நாங்கள் நெடும்காலமாக பலமட்டங்களில் போராடி வருகின்றோம்.

குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் எந்தவிதமான சுய நோக்கமும் இன்றி எமது மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். இந்த செயற்பாடு இனிமேலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அன்று இணைந்திருந்த வடக்கு, கிழக்கினை முன்பு அமைச்சராக இருந்த அதாவுல்லா இரண்டாக பிரித்ததன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல இடங்களில் நன்கு திட்டமிட்ட முறையில் நில அபகரிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட நில அபகரிப்பு காரணமாக தமிழர்கள் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி அனைத்து தமிழர்கள் தரப்பிலும் எழுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பலவெளி கிராமம் இன்று பெரும்பான்மை இனத்தவர்களின் அபகரிப்பால் சூரையாடப்பட்டிருக்கின்றது.

நில அபகரிப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டும் காணாமலும் இருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.

தேர்தல் காலங்களில் மக்களை நாடி வரும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மக்களை மறந்து விடுவதுதான் வழமை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டத்தின் இறுதியில் தலைவர் உட்பட அனைவராலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

batti005