தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் மீண்டும் முரண்பாடு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் இன்று மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மன்னார் நகர சபை டெலோவிற்கு வழங்கப்பட்ட போதும் அதனை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

டெலோ சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை இடம் பேற்ற போதும் மன்னார் நகர சபையின் ஆட்சி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனினும் குறித்த கோரிக்கையை டெலோ நிராகரித்ததோடு, டெலோவிற்கே வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பில் இருந்து வேளியேறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.