முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எமது மக்களுக்காக நாடாளுமன்றினூடாக குரல் கொடுக்க வேண்டும்: எஸ்.சுகிர்தன்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இனிவரும் காலங்களில் எமது மக்களுக்காக நாடாளுமன்றினூடாக குரல் கொடுக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையின் 112ஆவது அமர்வு நேற்று மாகாணசபை பேரவைச் சபா மண்டபத்தில் நடைபெற்ற நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய அரசாங்கம் எங்களுக்கு தெரியாமல் தான் நினைத்ததைச் செய்கின்றமை போன்று வட மாகாணசபையும், உறுப்பினர்களான எங்களுக்கு தெரியாமல் பலதைச் செய்கிறது.

அத்துடன், மாகாணசபையில் ஆளுங்கட்சியாக நாங்கள் இருக்கின்ற போதும் கடந்த நான்கு வருடங்களில் சபையில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற போது அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடமே இருக்கின்றது. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்கே தெரியாத நிலையில் அவற்றை எவ்வாறு எம்மால் தீர்த்து வைக்க முடியும்.

ஆகவே, இனிவரும் காலங்களிலாவது மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

தற்பொது இறுதி வரவு செலவுத் திட்டமும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்சபைக்கு எங்களில் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சர் உள்ளிட்ட நாங்கள் பலரும் கத்துக் குட்டிகளாவே அரசியலுக்கு வந்திருந்தோம்.

தற்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கின்றார். ஆகவே அவர் எமது மக்களுக்காக இனிவரும் காலங்களில் நாடாளுமன்றினூடாக குரல் கொடுக்க வேண்டிய அதேவேளையில், எமக்கு அடுத்து நல்லதொரு முதலமைச்சரும் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.