ஓரணியில் தமிழரின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

உள்ளக சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு தமிழரின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேற்படி நான்கு பிரதேச சபைகளுக்குமான வேட்பாளர்களை மக்கள், இளைஞர்கள், பெண்களின் கருத்துக்களை அறிந்தே தெரிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இன்றைய சூழலில் மக்களின் தீர்மானம் மிகவும் உறுதியாக வெளிவர வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டிலுள்ள அரசியல் சக்திகளும், அரசாங்கமும், சர்வதேச சமூகமும் இந்த தேர்தலில் மக்கள் எவ்வகையில் வாக்களிப்பர் என்பதை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கின்ற நிலையில், மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து வாக்களித்து எமது நிலைப்பாட்டை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, நாடு எதிர்நோக்கியுள்ள தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனம் ஊடாக ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.