இரா.சம்பந்தனின் அரசியல் சாணக்கியம்!

கூட்டமைப்பின் தலைவர் தாமொரு சாணக்கியம் மிக்க தேர்ந்த அரசியல்வாதி என்பதை மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பாகக் கூட்டமைப்பில் நிலவிய குழப்ப நிலைக்கு முடிவு கட்டியதன் மூலமாக அவர் இதைச் சாதித்துக் காட்டியுள்ளார்.

அவரது பொறுமையும் அடக்கமும் கொண்ட போக்கு அரசியலில் அவரையொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஒரு சில அரசியல்வாதிகள் போன்று எதற்கும் உணர்ச்சி வசப்பட்டு, எடுத்தோம், கவிழ்த்தோமென அவர் நடந்து கொண்டதில்லை.

மிகவும் இக்கட்டானதொரு சூழ்நிலையில் அவர் தமிழர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அவர்களுக்குள்ளேயே அடிக்கடி ஏற்படுகின்ற குழப்பங்களுக்கும் தீர்வு காண வேண்டிய பெரிய பொறுப்பும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

போர் காரணமாக பல்வேறு வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமிழ் மக்கள் போர் ஓய்ந்த பின்னரும் தமிழர்களின் வாழ்வில் நிம்மதி கிடைக்கவில்லை.

போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், போரின் போது கொல்லப்பட்டவர்கள், வீடுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் இருப்பவர்கள், ஆண்கள் கொல்லப்பட்டதால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், அங்கங்களை இழந்து அவதியுறுவோர், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்பவர்கள் எனப் பலரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் தலைவர் என்ற வகையில் இவற்றுக்கெல்லாம் தீர்வு கூற வேண்டிய பொறுப்பும் சம்பந்தனிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர் சளைக்காது இவற்றுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் நாட்டின் அரசியல் சூழ்நிலை அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதனால் அவருக்கு எதிரானவர்கள் அவரைக் குற்றம் சாட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். எந்த வகையிலாவது சம்பந்தனை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றி விடுவதே இவர்களது நோக்கமாகும்.

இவரை ஈ.பி.ஆர். எல். எப். கட்சியினர் போன்று வேறு எவருமே விமர்சித்ததில்லை. அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.

ஆனால் ஒரு பழுத்த பக்குவமான அரசியல்வாதி என்ற வகையில் சம்பந்தன் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னிச்சையான முடிவை எடுத்து கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றார். ஆனால் அவருடன் பேசி ஒரு சமரச முடிவை எட்ட வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக இருந்தார்.

ஆனால் மறு தரப்பினரின் பிடிவாதப் போக்குக் காரணமாக ஒரு நல்ல முடிவை எட்ட முடியவில்லை. ரெலோவும் ஆசனப்பங்கீடு தொடர்பாகப் கோபித்துக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வௌியேறியது.

பல தரப்புடனும் கூட்டணி அமைப்பதற்குப் பேச்சுகளில் ஈடுபட்டது. ஆனால் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தன.

தற்போது சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து கிளப்பிய வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் கூட்டமைப்பில் சங்கமமாகி விட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான வீ.ஆனந்தசங்கரி அரசியலில் புறமொதுக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த ஒருவர்.

எவருமே அவரைப் பொருட்டாக மதிப்பதாகவும் சீண்டுவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் வராத மாமணி போன்று வந்த உள்ளூராட்சித் தேர்தல் அவரை மீளவும் அரசியல் அரங்கில் தலைகாட்ட வைத்துள்ளது.

உதயசூரியன் சின்னம் அவர் வசம் இருப்பதே அவரை நாடிப் பலரும் வருவதற்கான பிரதான காரணமாகி விட்டது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் சைக்கிள் சின்னத்தைப் புறக்கணித்து விட்டுத் தற்போது உதயசூரியனிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தச் சின்னமாவது தம்மைக் காப்பாற்றாதா? என்ற நப்பாசையே இதற்கான காரணமாகும். ஆனால் மக்கள் ஏமாளிகளல்ல. உதயசூரியனின் பின்னால் மறைந்து நிற்பவர்களை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

மாகாண சபையில் குழப்ப நிலை காணப்பட்ட போது மாற்றுத் தலைமை தொடர்பாகப் பேசப்பட்டது. சம்பந்தனை தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதே பிரதான நோக்கமாகவும் காணப்பட்டது.

இதற்கு கூட்டமைப்பில் இருந்த சிலரும் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இது தொடர்பாக சம்பந்தனின் வாயிலிருந்து ஒரு சொல் கூட வௌிவரவில்லை.

வழக்கம்போல அமைதியை அவன் கடைப்பிடித்தார். தற்போது மாற்றுத் தலைமை என்ற பேச்சையே காணவில்லை. அதை உச்சரித்துக் கொண்டவர்களும் எங்கேயோ சென்று ஒழித்துக் கொண்டுள்ளனர்.

தமிழர் அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தந்தை செல்வாவுக்குப் பிறகு பலராலும் மதிக்கத்தக்கதொரு தலைவராகச் சம்பந்தனே விளங்குகின்றார்.

அரசியல் நுணுக்கங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள அவருக்கு நிகரான தலைவர்கள் தெற்கில் கூட உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அரசுடன் முட்டி மோதிக் கொள்ளாது காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதே சம்பந்தனின் இராஜதந்திரமாகும். இதனால்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு தேவையான வேளைகளில் அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு அவரால் முடிகின்றது.

அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒருவரைக் கண்டு பிடிப்பது எளிதான காரியமல்ல. நம்பகத் தன்மை இல்லாதவர்களிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பதும் புத்திசாலித்தனமல்ல.

ஆகவே சம்பந்தனின் காலத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும். இதை வேறொருவரிடம் ஒப்படைப்பது தமிழர் நலன்களுக்கு உகந்ததல்ல.

சம்பந்தன் தமது திறமையை நிரூபிக்கத்தான் போகின்றார். அதற்குச் சிறிய கால அவகாசம் தேவைப்படலாம்.