எமது குடும்பப் பிரச்சினையை தீர்த்து விட்டோம்: சாள்ஸ் நிர்மலநாதன்

உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டு வந்த எமது குடும்ப பிரச்சினை தீர்ந்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்துள்ளார்.

எமது குடும்பப் பிரச்சினையை தீர்த்து விட்டோம், கூட்டமைப்பு மன்னாரில் மட்டுமல்ல வடக்கு மற்றும் கிழக்கிலும் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சி இன்று மாலை மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, முசலி பிரதேசசபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.