மிகுந்த கவலையளிக்கிறது: க.வி. விக்னேஸ்வரன்

காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டத்திற்கு, மன்னார் மாவட்டத்திலிருந்து வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. இது மிகுந்த கவலையளிக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களமும், வன ஜீவராசிகள் திணைக்களமும் அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எனினும் பல பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்களத்தின் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்கமைத்திருந்தோம்.

ஆனால் பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்வில்லை. மேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து இந்த கூட்டத்திற்கு வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. இது மிகுந்த கவலையளிக்கின்றது.

மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டும் என்பதற்கு தடையாகவே இது உள்ளது. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.

மேலும் இன்றைய கூட்டத்தில் அரச காணிகள் தொடர்பாகவும், வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன மக்கள் காணிகளை அபகரிப்பது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளோம், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.