இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். நவக்கிரியில் உள்ள மூலிகைத் தோட்டத்தினை மீட்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த காணியை மீட்பதற்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மீதான விவாதம் நேற்றைய தினம் மாகாண சபையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,
“மாகாண சுகாதார அமைச்சுக்கு சொந்தமான மூலிகைத் தோட்டக் காணி யாழ். நவக்கிரியில் இருக்கின்றது. ஆனால் அங்கு சிறிய பகுதியிலேயே தற்போது மூலிகைத் தோட்டச் செய்கை இடம்பெறுகிறது.
எஞ்சிய காணியில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. அந்த இடத்தில் இராணுவ முகாம் அமைய வேண்டிய தேவை இல்லை.
எனவே மூலிகைத் தோட்டம் வினைத்திறனாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.