ரெலோவின் தவறினால் பறிபோனது இரண்டு சபைகள்! தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு

“அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த இரண்டு சபைகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இழந்துள்ளது.

அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது தவறு காரணமாகவே அந்த இரு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

பிற்பகல் 1.30 மணிக்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் நகர சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் கட்சியின் முகவர் இல்லாது முதன்மை வேட்பாளரினால் தாக்கல் செய்யப்பட்டமையாலேயே நிராகரிக்கப்பட்டன என்று தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.

இந்தச் சபைகளுக்கான கட்சியின் முகவராக ரெலோ கட்சியைச் சேர்ந்தவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சிச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் ஆலையடிவேம்பு, சம்மாந்துறை வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முதன்மை வேட்பாளர்களை அனுப்பி வைத்துவிட்டு மற்றைய இரு சபைகளுக்கும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தான் நேரில் சென்றிருந்தார்.

ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை சபைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டு ஆட்சேபனை எழுப்பப்பட்டதை அடுத்து அந்த வேட்புமனுக்களை நிராகரிப்பதாகத் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தார்.