வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சத்தியலிங்கம்,

வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு நகரசபைக்கும் மூன்று பிரதேச சபைகளுக்கும் உரிய கட்டுப்பணத்தை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் இன்று செலுத்தியிருக்கின்றோம்.

இந்த அனைத்துச் சபைகளிலும் நிச்சயமாக தமிழரசுக்கட்சி ஒரு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம்.

எங்களுடைய மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்ளைகளுக்கு அடிப்படையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரிய ஒரு ஆதரவைத்தந்து இந்த நான்கு சபைகளையும் கூட்டமைப்பு நிச்சயமாக கைப்பற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் இந்தக் கூட்டமைப்பினுடைய வெற்றிக்காக விட்டுக்கொடுப்புடன் நிச்சயமாக பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் பங்களாக்கட்சிகளின் உறுப்பினர்கள், வவுனியா நகர முன்னாள் உப பிதா சந்திரகுலங்கம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன மயூரன், மற்றும் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் சென்றிருந்தனர்.