வேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது: வருந்தும் மாவை சேனாதிராஜா

வேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முந்தினம் 16 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன் போது சில குழப்ப நிலைகள் நீடித்தன. குறிப்பாக வேட்பாளர் தெரிவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் அருந்தவபாலன் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தலைக்கவசத்தால் தாக்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், இது ஒரு துரதிஸ்டவசமான நிகழ்வு. எமது கட்சியின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அவ்வாறு நடந்து கொள்வது ஆரோக்கியமான செயல் அல்ல.

இந்த சம்பவம் குறித்து நான் முன்னதாக அறிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் என்ன நடந்தது என்பது குறித்து அறிந்தேன்.

வன்மமான செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக எமது மத்திய செயற்குழு முறைப்பாடுகள் தந்தால் நடவடிக்கை எடுப்போம். வேட்பாளர் தொடர்பான முழு விபரம் என்ன என்பது பற்றி நான் கவனிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.