எனக்காக திரண்டு வந்த இளைஞர்களே! தருணம் பார்த்திருங்கள்.. காலம் வெகு தூரத்தில் இல்லை

இளைஞர்களான உங்கள் எழுச்சியால் எவ்வாறு முதலமைச்சரை இது வரை நிலைக்க வைத்தீர்களோ, அதே எழுச்சியை மக்கள் இயக்கமாக பரிணமித்து அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய தருணம் நெருங்கி விட்டதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் “முதலமைச்சருக்கு ஆதரவாக திரண்டு வந்த இளம் சமூகத்தினருக்கு கூற விரும்பும் செய்தி என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இளைஞர்களின் தன்னார்வ தன்னியக்க திடீர் எழுச்சி ஒரு விடயத்தை புலப்படுத்தியது. கட்சி ரீதியான உட்பூசல்களை மக்கள் வெறுக்கின்றார்கள் என்பதே அது.

அதாவது கட்சிகள் மக்கள் சேவையிலும் பார்க்க தமது கட்டுக்கோப்பின் கரிசனையிலேயே நாட்டம் காட்டி வருகின்றார்கள்.

கட்டுக்கோப்பு என்று கூறும் போது கட்சிகளின் தலைமைத்துவத்தின் ஆதிக்கமே அங்கு நிலவுகின்றது. கட்சியின் தலைமைத்துவம் நினைப்பதை உறுப்பினர் கேள்விக்குட்படுத்தினால் உறுப்பினர் பாடு அதோகதிதான்.

அடுத்த தேர்தலுக்கு துண்டு தரப்படமாட்டாது. ஒரு சில கட்சிகளே ஜனநாயகச் செயற்பாட்டைத் தமது கட்சியை நடத்துவதில் கடைப்பிடிக்கின்றார்கள்.

ஆகவே எனக்காக திரண்ட இளம் சமூகத்திற்கு நான் கூற விரும்புவது எதுவென்றால்,

“உங்கள் எழுச்சியால் எவ்வாறு முதலமைச்சரை இது வரை நிலைக்க வைத்தீர்களோ, அதே எழுச்சியை மக்கள் இயக்கமாக பரிணமித்து அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.

நாம் எதிர்பார்க்கும் நீண்டநாள் பிரச்சினைகளை நிலையாகத் தீர்க்கும் தீர்வு எட்டப்படாது என்பதே எனது கணிப்பு. ஆகவே தருணம் பார்த்திருங்கள். உங்கள் தகைமை வெளிப்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.