கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் எவையும் இல்லை என்கிறார் சத்தியலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

vavutna001

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்துச் சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்கள் உங்களுடைய வாக்குக்களைச் சிதறடிக்காமல் வெல்லக்கூடிய கட்சிகளுக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்கவேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை செய்து கொடுக்கின்ற உள்ளூராட்சி சபைகளாக இருக்கின்றது.

நிச்சயமாக எங்களுடைய சபைகள் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு வவுனியா மாவட்டத்தில் வாழுகின்ற மக்களுடைய அன்டறாடத் தேவைகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எங்களுடைய உறுப்பினர்கள் நிச்சயமாக பாடுபடுவார்கள்.

நாங்கள் ஒரு பாரிய வெற்றியை வவுனியா மாவட்டத்திலே பெறுவோம் என்கின்ற நோக்கத்துடன் இன்று எங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.

இதேவேளை, வவுனியா நகரசபைக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதா என வினவியபோது, வவுனியா நகரசபை மாத்திரமல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் கைப்பற்றப்படுகின்ற சபைகளுடைய தலைவர்களை கட்சியின் மேலிடம் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்குள் கட்சிகளின் கருத்து முரண்பாடு தாக்கத்தை ஏற்படுத்துமா என வினவியபோது, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

நாங்கள் ஒற்றுமையாக வேட்பாளர்களை நியமிக்கும்போது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது வெவ்வேறு கருத்துக்கள் கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகளினால் சொல்லப்பட்டது. அதை நாங்கள் ஒரு முரண்பாடாகப்பார்க்கவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் ஒன்றாக தேர்தலிலே நிச்சயமாக செயற்படுவோம். வவுனியா வடக்கில் வாக்குக்கள் சிதறடிக்ககூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எனவே தமிழ் பேசுகின்றவர்கள் அனைவரும் ஒன்றாக வாக்களித்தால் மாத்திரம் அங்கு தமிழ் பேசுகின்றவர்கள் ஆழக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தலாம். மக்கள் நிதானமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இதேவேளை வவுனியா வடக்கைப் பொறுத்தவரையில் மிகவும் நிதானமாக சிந்தித்து அங்கு ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு தமிழ் பேசுகின்ற கட்சிக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்தின் கோரிக்கையாக உள்ளது என்றார்.