கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் இல்லை: துரைராசசிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை துரைராசசிங்கத்தின் தலைமையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

“எங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒரு குடும்பம் ஒன்றாகவே இருப்போம். குடும்பத்தில் இருந்து யாரேனும் பிரிந்து சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே இருப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாங்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம். ஏற்கனவே நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்ற ஒரு கட்சி. தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கூறிவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பது மன வார்த்தைகளாக இருக்குமே தவிர செயற்பாடாக இருக்க முடியாது.

பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் செய்யும் செயலே அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். வெறும் வார்த்தைகளினால் கூறுவதைக் கொண்டு மக்கள் அவர்களை மதிப்பிடமாட்டார்கள்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எல்லாம் மக்கள் அறிந்து வைத்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவும் எங்கள் பக்கம் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றி அதன் மூலம் சிறந்த சேவை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை செய்யும்.

இதேவேளை, தமிழர்கள் அனைவரும் கூட்டமைப்புக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்பதை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டை முன் நகர்த்த வேண்டும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.