தமிழர்களுக்கு என்றும் பலமாக விளங்கும் கூட்டமைப்பு!

தமிழ் மக்களாகிய நாங்கள் அரசியல் பள்ளியில் பயிலாமலேயே அனுபவப் பாடம் கற்றுக் கொண்டவர்கள்! உணர்வு மேலிட்டவர்கள்! இனத்துக்காகவும் மொழிக்காகவும் உயிரைக் கூடத் துச்சமாக மதிக்காதவர்கள்! எதை இழந்தாலும் அதனை மீண்டும் அடைந்து கொள்வதற்கான மன உறுதி கொண்டவர்கள்! அதனால்தான் அழித்தாலும், எரித்தாலும் மீண்டெழும் வல்லமையுடையவர்களாகியுள்ளோம்.

இத்தனை அழிவுகளின் மத்தியிலும் எதிர்நீச்சல் போட்டு, எழுந்து நிற்கிறோம். ஆனாலும் எத்தர்களை வைத்து எம்மை வீழ்த்திட, பல சக்திகள் சூழ்ச்சிகள் செய்து கொண்டு இருக்கின்றன. எழுந்து வீறுநடை போடுவதோ, விழுந்து மிதிபட்டு நடக்க முடியாமல் தவிப்பதோ எங்களது மனவுறுதியில் தான் தங்கியுள்ளன.

கல்வியில் உயர்ந்து, நிர்வாகத்தில் சிறந்து, நம்பிக்கையில் நாணயமாக, பொறுப்புக்களில் முதல்வர்களாகத் தமிழர்கள் திகழ்ந்தாலும், அவர்களை வீழ்த்திடவே ஆயிரம் எறும்புகள் போல் ஆதிக்க சக்திகள் செயற்பட்டு வந்தன.

உணர்வுகளால் உந்தப்பட்டவர்கள் பலம் கொண்டு நின்றாலும், உள்ளிருந்து அரிக்கும் கறையான்கள் போல காக்கை வன்னியர்களும், நாணற்புற்கள் போல் நயவஞ்சகர்களும் ,தமது சுயநலப் பசிக்கு தீனி போட்டார்கள். தமது புகழை நிலைநாட்ட தமிழினத்தின் தலைவிதியைக் கையில் எடுத்தார்கள்.

இவை எல்லாம் நடைபெற்று முடிந்து விட்டவைகளாயினும், எங்களது எழுதல்கள் எல்லாம் விழுதல்களாகவே இருந்து விட்டன. அகிம்சையாய் ஆயுதமாய், பலம் சேர்த்தோம்.அரக்கர்கள் இரக்கமின்றி எம்மை அழித்து விட்டார்கள்.

உதைத்து உயிருக்குப் போராடும் வேளையிலே, உணவைக் கொடுத்து உயிர்பிழைத்துக் கொள் என்பதுபோலவே எம் நிலை, வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

வாய்ப்பேச்சில் வல்லவரெல்லாம் வெற்றிபெற்றுத் தந்தவர்கள் அல்ல, விவேகம் நிறைந்தவர்களால் தான் வெற்றிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன என்பதை எமது அன்றாட வேலைகளிலே நாம் கண்டு கொள்கின்றோம்.

சிங்கமும் முயலும் கதை, வீரத்தையும் விவேகத்தையும் எமக்கு எடுத்துக் கூறுகின்றது.தனித்தனியே பிரிந்ததால் பசுக்கூட்டங்கள் என்ன ஆயின என்ற கதை, கூட்டாலே ஆகாதது, பாதுகாப்புப் பூட்டாலே நிலைக்காது என்பதைத் தெரிவிக்கின்றது.

வேட்டையாடித் தோற்றுக் களைத்துப் போன சிங்கம், மற்றைய மிருகங்களை விரோதியாக எண்ணாமல் காட்டிலே நாமெல்லாம் அவரவர்களது இடங்களிலே வாழ்ந்திடுவோம் வாருங்கள் என்று அழைத்தது.

சிங்கத்துக்குப் பயந்தல்ல, இதுவரையும் நடைபெற்ற கொடூரங்கள் இனியும் வேண்டாம் என்று உணர்ந்த மிருகங்கள்ஒன்றுபட்டன. பிரச்சினைகள் குறைந்து தத்தமது பகுதிகளில் பாதுகாப்பாக வாழ்ந்தன.

மேற்குறித்த நிலையில்தான் தமிழர்களின் வரலாறு நடந்து வந்துள்ளது. பின்னைய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் நடந்திடாத எதிரும் புதிரும் ஒன்றுபட்டு நிற்கின்றன. துண்டு விழாமல், முண்டு கொடுத்து நின்று நிலைத்து ஒன்றுபட்டு வாழ்வோம்.

உன் இடத்தில் நீயும், என் இடத்தில் நானும் வாழ்வோம், உனக்கான தேவைகளை நான் தருவேன். நீ உன்னைப் பார்த்துக் கொள். சட்டப்படி நீயும் நானும் எழுத்தினாலே உறுதிப்படுத்திக் கொள்வோம்.

பிரச்சினைகள் வரும், வந்தால் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற நிலையில் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை குறைப்பதற்கும், நிறுத்துவதற்கும் எதிரும் புதிருமாய் ஏட்டா போட்டிகள் ஏற்பட்டுள்ளன.

இறுதிச் சந்தர்ப்பம் இது, ஏற்றுக் கொண்டால் வாழ்வோம். எதிர்த்தால் உக்கி உருக்குலைந்து போவோம் என்பதே உண்மை.

பைபிளில் ஒரு கருத்துச் சொல்லப்படுகின்றது. பழைய திராட்சை இரசத்தை பழைய சாடியில் ஊற்றி வைக்கலாம். புதியதை புதிய சாடியில் ஊற்றி வைக்காவிட்டால் சாடியும் (உடைந்து) இரசமும் வீணாகிவிடும்.

பழையவற்றையே பேசிப் பெருமை கொண்டு, பாவம் மக்களை ஏழைகளாகவே விட்டுவிடாமல், புதிய ஒன்றுக்கு காலம் கனிந்துள்ள போது, வெண்ணெய் கிடைக்கப் போகும் நேரத்தில் தாளியை உடைக்க மண் குதிரை வீரர்கள் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் சிந்திக்கிறார்கள்.

வரலாறுகள் தெரியும், பலம் தெரியும், முடங்கிப் போகாமல், தைலத்தைத் தேய்த்தாவது எழுந்து நடந்து எங்கள் காரியங்களைப் பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமானது. கெடுகுடி சொற்கேளாது என்பது முன்னோரின் பொன்மொழியாகும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள். தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் என்றும் கூறுவார்கள். மலையை உடைத்து தரைமட்டமாக்குவதும், மண்மேட்டை அழிப்பதும் ஒன்றல்ல.

இதுபோலவே கூட்டாக இருப்பது தான் பலமும் பாதுகாப்பும். தனித்தனியானால் முறிக்கப்பட்டு விடுவோம். கம்பியை மட்டும் வைத்து பலமான தூணை அமைக்க முடியாது. சீமெந்து, மணல், நீர், கம்பி சேர்ந்துதான் தூணாக மாறுகின்றது. இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் தூணாக முடியாது.

எல்லோரும் இணைவது ஏகபலம் என்பார்கள். பிரிந்து போனால் இருந்து அலைவோம், புரிந்து ஒன்றானால் போக்கிடலாம் ஏக்கமெல்லாம். கட்சிகள் ஒன்றாய் இணைந்தால் விடிவுக்குக் காலம் எடுக்காது.

பிரிந்தால் தொடர்ந் திடும் பிரச்சினைகள், அடர்ந்த காட்டில் அபலமாய் விடப்பட்டவர்கள் போலாவோம்.துன்பங்கள் தான் தொடர்ந்திடும். பிரிவினைகளால் ஒற்றுமையை வளர்க்க முடியாது. வெல்லவும் முடியாது உணர்ந்திடுவோம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். கடவுள் மக்களுக்கு நன்மை தான் செய்வார். அதுபோல மக்களுக்காக வாழாதவர்கள், தம் வாழ்வை மேம்படுத்தி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துபவர்களை, மக்கள் இனம்கண்டு கொள்வார்கள்.

அவர்கள் மாக்கள் அல்ல, மக்கள். தலையாட்டவும், அசை போடவும், ஏமாற்றவும் முடியாது. அதுபோல மக்களை நேசிப்பவர்கள் மக்களால் விரும்பப்படுவார்கள். இதனையும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

எனவே தலைவர்கள் எனப்படுபவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். தீர்க்க தரிசனமற்ற, முன்யோசனை, எதிர்காலத் திட்டங்கள் இல்லாத தலைவர்கள் புறந்தள்ளப் படுவார்கள்.

மக்களுக்காக மகத்தான தலைவர்களாக இணைந்து தமிழரின் தலைவிதியை மாற்றி தலைநிமிர்ந்து வாழ ஒன்றிணைந்து செயற்படுங்கள். எதிர்காலம் வளமாகும்.