மத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கேட்ட பொழுது,

ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அப்படி நாங்கள் இருக்கவும் மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட புகைப்படத்தில், அமைச்சர் எம்.ஏ சுமந்திரன் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கருணா, எம்.ஏ. சுமந்திரன் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதை அறிந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்தக் கருத்துக்களை தமிழரசுக் கட்சியின் தலைவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.