இலங்கையின், மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கட்டப்பட்ட அரிசிமா தயாரிப்பு நிலையத் திறப்பு விழா நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஒன்றியத்தின் பணிப்பாளர் ஆர்.தில்லைநாயகம் தலைமையில், கல்முனை குவாரி வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் மக்களின் அமைப்பான பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டமானது நாளுக்கு நாள் தமிழர்களின் நிலையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், இந்தப்பகுதி மக்களின் இடர்களை கருத்திற்கொண்டு கனடிய தேசத்தில் தாயகத்தில் இருந்து சென்று புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் அமைப்புக்கள் பல வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில், கனடாவில் வாழும் பிரம்ரன் தமிழ் ஒன்றியம், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலையை கருத்திற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் குறித்த அரிசிமா தயாரிப்பு நிலையத்தினை அமைத்துக் கொடுத்துள்ளதாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த திறப்பு விழாவின்போது, பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராசசிங்கம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாகிட், கல்முனை ஸ்ரீமுருகன் தேவஸ்த்தான பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்தசிவம் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.