தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலம் பொருந்திய அமைப்பு: த.சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலம் பொருந்திய அமைப்பு என நிரூபித்துக் காட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு இங்கு கூட்டமைப்பினர் தான் இருக்கின்றார்கள் என்ற நிலையை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முல்லைத்தீவு வேட்பாளர்களை நேற்று சித்தார்த்தன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

முள்ளியவளை புளொட் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இதில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் வேட்பாளர்கள் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இந்தத் தேர்தல் ஒரு சாதாரண உள்ளூர்த் தேர்தலாக இல்லாமல் தேசிய மட்டத்தில் மிக முக்கியமான தேர்தலாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று தெற்கிலே உள்ள கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிப்பதன் மூலம் இப்போது உள்ள அரசு, தொடர்ந்து தான் தார்மீக அரசாக இருக்கலாம் என்பதை நிரூபிப்பதற்கு அரச கட்சிகள் இரண்டுமே செயற்படுகின்றன. அதேபோல் மஹிந்தவின் கட்சி, தாங்கள் வெல்வதன்மூலம் சாத்வீக ரீதியாக தாங்கள் பலம் பொருந்தியவர்கள் என்று காட்டுவதற்கு முனைகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்குப் பகுதிகளிலும் மக்களின் ஆதரவைச் சோதிக்கக்கூடிய ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் இன்று தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பலத்தை வைத்து அரசுடனும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்கம் போன்ற பேச்சுக்களில்

பங்குபற்றுகின்றது.

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை விமர்சித்து மாற்றுக் கட்சிகள் பல தேர்தலில் குதித்துள்ளன.

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுமானால் அது தமிழ்மக்களின் பிரச்சினைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் காரணியாக அமைந்துவிடும்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளை பொறுத்தமட்டில், கூட்டமைப்பு பலவீனப்படுமானால் அதனுடன் பேசவேண்டிய தேவை இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து அரசமைப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த அரசமைப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு நியாயமான தீர்வைக் கொண்டுவரும் என்று நான் கூறவில்லை. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து நாமாகவே ஒதுங்கினால் அல்லது கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டதால் ஒதுக்கப்படுகின்ற ஒரு நிலையோ உருவானால் மீண்டும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு மீக நீண்ட காலம் எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலம் பொருந்திய அமைப்பு. தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு இங்கு அவர்கள்தான் இருக்கின்றார்கள் என்ற நிலையை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் உறுதிப்படுத்தவேண்டும். இதனை உறுதிப்படுத்தத் தவறினால் நாங்கள் உதிரிகளாகப் பல கட்சிகளாக பிரிந்து போக நேரிடும். அரசுக்கு இது இலகுவாக இருக்கும்.

எனவே, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை ஒரு முக்கிய கடமையாக நான் பார்க்கின்றேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.