பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராசா

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இம்முறை 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமானது.

தற்போது பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் எனும் வகையில் இவ்வாறாக தேர்தல்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்சிகளின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாக மக்களின் வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ளாது, போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொந்த தகுதி நிலைகள், கல்வி, அனுபவம் என்வற்றை குறிப்பிட்டு எவ்வாறு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது தொடர்பான விளக்கங்களை கூற வேண்டும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.