ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை: சிறீதரன் பா.உ

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் அவை விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இரணைதீவு காணியை விடுவிக்கக்கோரி அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்களினுடைய காணிகளை இன்னமும் அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராக இல்லை. கிளிநொச்சி நகரப்பகுதியில் நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதும், அதில் பழைய நீர்த்தாங்கியைஅகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத்தளபதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சித்திரை மாதம் 18ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் ஆக்கிரமித்துள்ள மக்கள் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டது.

படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களுடைய காணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குழு அந்தந்த மாவட்ட செயலகங்கள் ஊடாகவும், நேரடியாகவும் தகவல்களைச் சேகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் அரசாங்க அதிபர் படைத்தளபதிகளுடனான சந்திப்பு ஒன்று மீண்டும் கடந்த சித்திரை மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கேட்டபோது படையினர் உறுதியளித்தவாறு ஒரு துண்டு நிலம் இன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை.

குறித்த நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

ஆனால் அது கிளிநொச்சி மாவட்டத்திற்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.