சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவோம்! ஆனால் பெயர் பலகை இருக்காது: எம்.ஏ.சுமந்திரன்

நாங்கள் சமஷ்டி கட்டமைப்பிலான ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்துவோம். ஆனால் அங்கே சமஷ்டி பெயர் பலகை இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசிக்காமலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரிக்க வேண்டும் என பேசி வருகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுடன் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உப குழுக்களின் அறிக்கை வெளியானது தெரியாமல், இடைக்கால அறிக்கையை வாசிக்காமல் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சொன்னார். மேலும் அதிகார பகிர்வு பற்றி பேசுகிறார்.

ஆனால் மாகாணங்களுக்கு உச்சபட்ச அதிகாரங்கள் வேண்டும் என கேட்டது வட மாகாண முதலமைச்சர் அல்ல.

மற்றைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களே அதனை கேட்டார்கள். அவர்கள் சட்டம் ஒழுங்கு தமக்குத் தர வேண்டும் எனக் கேட்டார்கள். ஆளுநருக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றார்கள்.

சிலர் ஆளுநரே வேண்டாம் என்றார்கள். மேலும் சிலர் காணி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

தற்போதுள்ள அரசியலமைப்பே எங்களுடைய பிரச்சினை. எனவே அதனை மாற்றியமைக்கும் முயற்சியில் நாங்கள் அரைவாசி தூரம் வந்திருக்கின்றோம். இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றுகிறது. ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது என சொல்கிறார்கள்.

ஆனால் இடைக்கால அறிக்கையின் 1ம், 2ம் பக்கங்களை வாசித்தாலே இந்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்பது மக்களுக்கு தெரியும்.

முதலாம் பக்கத்தில் சமஷ்டிக்கும், ஒற்றையாட்சிக்குமான வர்ணனை உள்ளது. இரண்டாம் பக்கத்தில் இந்த நாட்டுக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என சொல்லப்பட்டுள்ளது.

அப்படி இருக்க ஒற்றையாட்சிக்கு நாங்கள் இணங்கிவிட்டோம் என கூறுவது எப்படி?.

நாங்கள் தொடர்ச்சியாக கூறுவது ஒன்றுதான். நாங்கள் சமஷ்டி கட்டமைப்பிலான ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்துவோம். ஆனால் அங்கே சமஷ்டி பெயர்ப் பலகை இருக்காது.

நாங்கள் சொன்னது நடந்திருக்கிறது. இடைக்கால அறிக்கையில் 30ம், 34ம் பக்கங்களை வாசித்தால் அது தெரியும்.

கொடுக்கப்படும் அதிகாரங்கள் மீள பெறப்பட முடியாது. கொடுக்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்பட முடியாது. கொடுக்கப்படும் அதிகாரங்களில் மத்தி தலையிட முடியாது என அவற்றில் கூறப்பட்டுள்ளது. இவை சமஷ்டியின் குணாதிசயங்கள்.

வடக்கு, கிழக்கு இணைப்பை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என சொன்னார்கள். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு 3 தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த 3 தெரிவுகளில் 2 தெரிவுகள் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அடிப்படையாக உள்ளன. இந்த உண்மைகளை ஊடகங்களும் சொல்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 21 பேர் கொண்ட குழுவில் நாங்கள் இருவர் இருந்து கொண்டு ஆயுதம் இல்லாமல் இந்தளவு தூரம் வந்ததே பெரிய சாதனை. ஆகவே நாங்கள் சாதித்துள்ளோம். அது மக்களுக்கு தெரியும் எனவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.