சிலருக்கு திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளது: சுமந்திரன்

தமிழில் எழுதி இருப்பதை ஊடகங்களுக்கு வாசிக்க முடியாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளது.

அத்துடன் தற்போது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும்.

இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களுக்கு தமிழில் எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என எழுதப்பட்டுள்ளது.

அதனை படித்து பார்த்து மக்களுக்கு சொல்ல முடியாமல் இருக்கின்ற ஊடகங்கள் தான் மத்தியில் இருக்கின்றன.

112 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுமுதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள். சமஸ்டி மற்றும் ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது.

ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது.

2010இல் இரு தேசம் ஒரு நாடு என்ற பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர். பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

இதைத் தான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம். சமஸ்டியை பாட்டன், தகப்பன் மற்றும் மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள்.

இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள் தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர்.

படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். புடித்தவர்கள் என சொல்பவர்கள் பலதீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். பின்னர் ஒருமணித்தியாலயத்தில் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள்.

படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது? நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள் அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று, பதின்நான்கு நாட்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதா? என மேலும் குறிப்பிட்டுள்ளார்.