சரியான தீர்வு இன்றேல் சர்வதேசத்தை நாடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்

புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் எம்மால் சர்வதேசத்திடம் நியாயத்தைக் கேட்கமுடியும் என ரெலோவின் தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் எதிராளியாகப் பார்ப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான். தென்னிலங்கையில் நடைபெறும் விடயங்களை விமர்சிப்பது குறைவாகவே உள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதற்குத் தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கிலும் பல கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தேசியத்துக்காகத் தன் இனம் சார்ந்த, மொழி சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு செல்கின்ற கட்சியாகவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரையும் விமர்ச்சிப்பது இல்லை. இதனால்தான் எம் மீது விமர்சனம் வருகின்றது. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல் எறி விழுகின்றது.

எங்கள் மீதான விமர்சனத்தை நாங்கள் பார்த்து அதனைத் திருத்துகின்ற வழியைத்தான் செய்து வருகின்றோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்தவரை பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் இடைக்கால அறிக்கை பற்றியும் ஐ.நா. பற்றியும் எழுதியுள்ளார்கள். எங்கு எதனைச் சொல்லுவது என்றே தெரியாது நிற்கிறார்கள்.

புதிய அரசமைப்புத் தொடர்பில் ஒரு இடைக்கால அறிக்கையே வந்துள்ளது. இடைக்கால அறிக்கையையே ஒன்றுமில்லை ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.

புதிய அரசமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றிப் புதிய தலைமையை உருவாக்க வேண்டுமென்றெல்லாம் கதைக்கின்றார்கள். இவையே சுவரொட்டியில் கூடக் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது உள்ளூர் ஆட்சியே. எமது பிரதேசங்களை, எமது வட்டாரங்களை அபிவிருத்தி செய்வதே அது. இதனைப் புரியாதவர்கள்தான் இன்று தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இதனால் இவ்வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பெரும் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்த சர்வதேசத்திடம், சர்வாதிகாரம் செய்த மஹிந்தவை மாற்றியமைத்த சர்வதேசத்திடம் நாங்கள் சில விடயங்களைக் கேட்பதற்குச் செல்வதாயின் புதிய அரசமைப்புக்கு எங்களால் குழப்பமில்லாத வகையில் நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு செல்வதன் மூலமே எமக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் நியாயத்தைக் கேட்கமுடியும்.

இதற்காகத்தான் ஒரு சில நடவடிக்கைகளை அரசுடன் இணங்கிச் செய்து வருகின்றோம். இதற்காக அரசின் அடிவருடிகளாக நாங்கள் இருக்கவில்லை.

இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இவை எமது மக்களின் நியாயத்தை கேட்கின்ற சந்தர்ப்பங்களே தவிரக் காட்டிக்கொடுப்பதல்ல என்றார்.