தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஈ.பி.டி.பியினர் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறிக்குத் தொலைபேசி ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரின் பாதுகாப்புக்குப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வழங்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வேட்பாளர் உதயசிறி தெரிவித்ததாவது,

“எனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த றீகன் என அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலிலிருந்து என்னை விலகவேண்டுமெனக் கேட்டார்.

அல்லது தேர்தல் வேட்பாளர் தகுதியை வாபஸ் பெறவேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் 35 இலட்சம் ரூபா பணத்தைத் தருவதாக அவர் கூறினார். நான் தேர்தலிலிருந்து விலகமாட்டேன் எனத் தெரிவித்தேன்.

தேர்தலிலிருந்து விலகாவிடினும், என்னைத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடாது எனவும், ஈ.பி.டி.பி. வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபடவேண்டும் எனவும் அநாமதேய அழைப்பை ஏற்படுத்தியவர் குறிப்பிட்டார்.

அதற்கும் நான் மறுப்புத் தெரிவித்துவிட்டேன். உங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றாது. நாங்கள் எவ்வளவு பேரைப் போட்டுத்தள்ளினாங்கள் தெரியும்தானே. உங்களுக்கு உயிர்மேல் ஆசையிருந்தால் தேர்தலிலிருந்து ஒதுங்குங்கள் என்றார் அவர்.

இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், எனது வீட்டுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை அனுப்பிப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்திப் போலி நபர் ஒருவரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அந்தக் கட்சியின் உறுப்பினர் எவரும் டக்ளஸ் தேவானந்தாவைத் தலைவர் என அழைப்பதில்லை. தோழர் என்றே அழைப்பர். எனினும், அநாமதேய அழைப்பை ஏற்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவர் என்றே பல தடவைகள் விழித்திருந்தார்.

மேலும், இது தொடர்பில் ஈ.பி.டி.பியினரிடம் தெரிவித்தோம். அவர்கள் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துவிட்டனர். இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு பிரிவிடமும் முறைப்பாடு செய்துள்ளோம்” – என்றார்.