வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்பதற்காக பிரதேசவாதத்தையும் கக்குகின்றனர்: எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இணையும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு, கிழக்கு இணைப்பை தடுப்பதற்காக சிலர் பல கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.

இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டும் என்பதை வெறும் கோஷமாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை சாத்தியமற்றதாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

மனதளவில் வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை கோஷமாக முன்வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இணைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டும் என்று வெறுமனே கூறினால் அது முஸ்லிம் மக்களின் மனதைப் பாதிக்கும். ஏனென்றால், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அப்படி எவ்வாறு கூறமுடியும் என்று அவர்கள் சிந்திப்பார்கள்.

அதனால்தான், வடக்கு – கிழக்கு மாகாணங்கள், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

கிழக்கில் கருணா செய்ததை தமிழரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் செய்யப் பார்க்கின்றாரா என்று எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பிரதேசவாதத்தை கிளப்பியிருக்கின்றார்கள்.

இப்படிச் செய்பவர்கள், கிழக்கு முஸ்லிம் மக்களின் மனதை மாத்திரம் அல்ல, தமிழ் மக்களின் மனதையும் புண்படுத்துகின்றார்கள். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்பதற்காகத்தான் இவ்வாறு செய்கின்றார்கள்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பில் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு – கிழக்கு இணைப்புக்காக நாங்கள் வழிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு இணைப்பை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று சொல்லிக்கொண்டு வடக்கு – கிழக்கு இணைப்பையே இல்லாமல் செய்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.