கூட்டமைப்புதான் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்! கி.துரைராஜசிங்கம்

தமிழ் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என்பதை உலகறியச் செய்வதற்காக இம்முறை தேர்தலை எதிர்நோக்கியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று நற்பிட்டிமுனையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது ஒரு நாட்டினுடைய நிர்வாக அமைப்பிலே அடித்தளமாக இருக்கின்ற ஒரு நிர்வாக அமைப்பாகும்.

குறிப்பாக வீதிகளை அபிவிருத்தி செய்வது, சந்தைகள், மயானங்களை பேணுவது, மக்களுக்கு குடிநீர் வழங்குவது, சுத்தத்தினை பேணுவது போன்ற உள்ளூர் விடயங்களை மாத்திரம் கையாளுவதுதான் இந்த உள்ளூர் அதிகார சபையாகும்.

எமது போராட்டங்கள், உரிமைக்கோரிக்கைள் என்பனவற்றின் இன்னுமொரு கட்டமாக உரிமைகளை வென்றெடுத்து அந்த உரிமைகளை அதி உச்ச ஆவனம் என்று சொல்லப்படுகின்ற அரசியல் அமைப்புச்சட்டத்திலே பதித்துக்கொள்ளுகின்ற அந்த விடயத்திலே நாங்கள் நிற்கின்றோம்.

எனவேதான் நாங்கள் அனைவரும் மிகவும் நுணுக்கமாகவும், அவதானமாகவும், நடந்து கொண்டு இந்த அதிகாரங்களை எங்களது அரசியல் அமைப்புச்சட்டத்திலே பதிவு செய்வதென்பது மிக முக்கியமானதொன்றாகும்.

புதிய அரசியல் திட்ட வரைபை பொறுத்தவரையில் நிதானமாக சிந்தித்து இரண்டு பக்க மக்களின் மனங்களையும் பாதிக்காத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பு தன்னுடைய இலக்கில் இருந்து விடுபட்டுச்செல்கின்றது என்றும், அரசியல் அமைப்பு விடயத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு, பகிரப்பட்ட இறையாண்மை போன்றவற்றை விட்டுக்கொடுத்து விட்டார்கள் என தற்போது பிரச்சாரம் செய்ய முற்படுகின்றார்கள்.

கூட்டமைப்பை விசுவாசமாக பின்பற்றுகின்ற தொண்டர்களை பொறுத்தவரையில் அவர்கள் விசுவாசிகளாக இருந்துகொண்டும் கூட எங்களுக்குள்ளே கேள்விகளை கேட்டு குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பானது சமஸ்டி கட்டமைப்பு என்ற ஒரு அதிகார வடிவத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. சமஸ்டி கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானதொன்று.

அதற்கு ஏற்ற விதத்திலே தற்போது அரசியல் நிர்ணய சபையாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த அரசியல் அமைப்பு தொடர்பாக பெரும்பான்மை கட்சிகளால் காலாகாலமாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம்.

அதன்காரணமாக தற்போதும் ஒரு முறை ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற பயம் அனைவரிடத்திலும் இருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் என்பது இதற்கு முன்பு நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்டங்களை விட தமிழர்களை பொறுத்தவரையில் வித்தியாசமானது” என அவர் மேலும் கூறியுள்ளார்.