பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அறிக்கையும் மைத்திரியின் அறிவிப்பும்! சம்பந்தனின் பகிரங்க கோரிக்கை!

தற்போதைய அரசியலில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையும், அது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்புகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் விற்பனை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகாரபீடங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும், உண்மையின் பக்கமே கூட்டமைப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பிணைமுறிகள் விடயம் சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக எடுக்கவேண்டும்.

ஊரிய அதிகார பீடங்களுக்கு அவை அனுப்பப்பட்டு தாமதமின்றி துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நாம் மேற்பார்வையாளர்களாக இருப்போம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த நாட்டில் பொதுச்சொத்துக்கள் முறையற்ற வகையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகமாக பயன்படுத்துவதற்கு எவ்வித அங்கீகாரமும் யாருக்கும் கிடையாது.

கடந்த காலங்களில் இவ்விதமான விடயங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. அதேபோன்று தான் ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்வித­மான செயற்பாடுகள் அனைத்தும் எதிரான நிலைப்பாட்டினையே நாம் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பொதுச் சொத்து துஷ்பிரயோகங்கள், ஊழல்மோசடிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவை பகிரங்கப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். நாம் எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம்” என்றார்.