விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மண் என்பதால் புளொட்டிற்கு வேட்பாளர் தெரிவில் சிரமம் இருந்திருக்கலாம்: பா.உ சிவமோகன்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இறுதிவரை இருந்த மண் என்பதனால் புளொட்டிற்கு புதுக்குடியிருப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக தன்னிலை விளக்கத்தினை அளிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பனை வவுனியாவில் ஏற்பாடு செய்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த 100 வீத வெற்றிக்கு சேறு பூசுவதற்காக வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்தில் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் என்னிடம் வேட்புமனு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்போது எனது பணியாக காணப்பட்டது வேட்பாளர்களிடம் ஒப்பம் பெறுவதே.

அதனை உரியவர்களிடம் முகவர் ஊடாக தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைப்பது மாத்திரமேயாகும். அந்த வகையில் சகல வேட்பாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாள் அனைத்து வேட்பளார்களிடமும் ஒப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 23 பேர் ஒப்பமிட வரவேண்டியவர்களாக இருந்தும் 21 பேர் சமூகமளித்திருந்தனர். அதில் புளொட் சார்பாக போட்டியிட வேண்டிய வேட்பாளர் அவ்விடயத்திற்காக அங்கு வரவில்லை.

அதன் பின்னர் நாம் நேரடியாக புளொட்டின் பிரதேச பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அந்த பெண்ணை அனுப்புமாறு கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் ஊடக அறிவிப்பில் எனது அலுவலகத்தில் மிரட்டல் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. அது பொய்யான ஊடகத்தகவல்.

அலுவலகத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் வைத்தே அந்த பெண்ணுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது.

ஆகவே அந்த பிரதேச புளொட் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்கவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அதன்போது ஒப்பமிடுமாறு குறித்த பெண்ணிடம் நான் நேரடியாகவே கூறியிருந்தேன்.

நீங்கள் ஒப்பமிட்டால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் நீங்கள் ஒப்பமிட்டு செல்லலாம் என கூறியிருந்தேன். அப்போது அந்த பெண் தெரிவித்திருந்தார் புளொட்டின் வற்புறுத்தலாலேயே நான் இங்கு வரவேண்டியிருந்தது. எனக்கு இதில் ஒப்பமிட சம்மதமில்லை.

என்னை வற்புறுத்தவேண்டாம். அதை செல்லிவிட்டு செல்லவே நான் வந்தேன். ஒப்பமிட வரவில்லை என கூறியிருந்தார். அதன் பின்னர் தான் வேட்பாளராக இல்லாமல் போனதற்கு நானே காரணம் என சொல்லப்படுகின்றது.

உண்மையில் அந்த பெண் அங்கு வராமையும் ஒப்பமிடாமையுமே காரணமாகும். இதற்கு அனைத்து வேட்பாளர்களும் சாட்சியாகவுள்ளனர். இவ்விடயம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற விடயம்.

ஆனால் அப்பெண் தனது கிராமத்திற்கு சென்றதன் பின்னர் நடந்ததாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. அதைப்பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை.

அதற்கும் எமக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இது பொய் வாக்குமூலத்தினை ஊடகங்கள் ஊதி பெருப்பித்து புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தட்டிவிடுவதற்காக செய்யப்பட்ட காரியமாகவே இதனை பார்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் நீங்கள் வெளியிட்ட ஒலி வடிவம் அந்தப் பெண்ணுடையதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஏன் நீங்கள் அந்த பெண்ணை அழைத்து வந்து ஊடகவியலாளர்களை சந்தித்திருக்ககூடாது என கேட்டபோது,

அந்த பெண் மீண்டும் மீண்டும் ஊடகங்களின் முன் வந்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அத்துடன் இந்த ஒலி வடிவம் நான், விவசாய அமைச்சர் சிவனேசன், அந்த பெண் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கின்றோம்.

ஆகவே இதனை உறுதிப்படுத்துவது கடினமாக இருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காவே இதுவரை காலமும் நான் இது தொடர்பான மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாமல் இருந்தேன்.

ஆனால் இது தடம்மாறி ஊடக அறிவிப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு பொய்யான பரப்புரை தேர்தல் ஆணையாளர் வரை சென்றமையினால் இதனை ஊடக சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த விரும்பியிருந்தேன்.

இது மாத்திரமின்றி புதுக்குடியிருப்பு மண், விடுதலைப்புலிகள் இறுதிவரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்த மண்ணாகும். இந்திய இராணுவத்தை தவிர எந்த இராணுவமும் விடுதலைப்புலிகள் இல்லாமல் போகும் வரை அங்கு சென்றதில்லை.

எனவே புளொட் அமைப்புக்கு அங்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் வற்புறுத்தியதாக நான் கூறவில்லை.

எனினும் உண்மைகளை அறிந்துகொண்டு ஊடக அறிவிப்புகளை செய்திருந்தால் இவ்வாறான பிரச்சினை வந்திருக்காது. அல்லது பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தை பெண்ணிடம் எடுத்தவர்கள் அதேநாளில் என்னிடமும் எடுத்திருந்தால் அதனை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினை அன்றே நின்றிருக்கும்.

ஆனால் இன்று ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு என்மீது சேறுபூச நினைக்கின்றனர். இது அனைத்தும் அப்பட்டமான பொய்யான அறிக்கை என தெரிவித்துள்ளார்.