கொழும்பில் சுமந்திரனுக்கு உல்லாச பங்களா; சுமந்திரன் பதில்

இலங்கை அரசாங்கம் எனக்கு உல்லாச பங்களா வழங்கியதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு அண்மையில் நடைபெற்றது. இதன்போது பேசிய சுரேஸ் பிறேமச்சந்திரன், அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நன்மைகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொழும்பு 7ல் உல்லாச பங்களா வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த கருத்தை இன்று பருத்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுமந்திரன் மறுத்து பேசியிருக்கிறார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொழும்பில் ஒரு விலாசத்தை சொல்லி அந்த விலாசத்தில் எனக்கு ஒரு பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு 135 ரூபாய் வாடகை எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். அந்த கருத்து அப்பட்டமான பொய்.

அவர் கூறியிருக்கும் அந்த விலாசத்தில் பங்களாவே இல்லை. அவ்வாறு பொய்யான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து முதல் பக்கத்தில் செய்தியாக பிரசுரித்திருக்கின்றது.

இவ்வாறே எமக்கு எதிரான பொய்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.