தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமையவேண்டும்: தலைவர் சம்பந்தன் கோரிக்கை!

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவு அமையவேண்டும் என வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வாக்குகளினால் தமிழ் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் பல மாற்றுக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக களமிறங்கினாலும் எமது மக்கள் நிதானமாக சிந்தித்து புத்திசாலித்தனத்துடன் செயற்படுவார்கள்.

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவு அமையவேண்டும்.

வெளிவரவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் எமது மக்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் முன்வைத்துள்ளோம்.

நாங்கள் ஒரு தனித்துவமான இனம். தேசிய இனம். எமக்கு ஒரு கலையுண்டு, பண்பாடுண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் குடியியல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், ஒரு தனிப்பட்ட மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துண்டு.

அதனடிப்படையில் தான் எமது தேர்தல் பிரசாரம் அமைகின்றது. ஒருமித்த நாட்டுக்குள் பிளவு ஏற்படாமல், அதிகாரம் எங்களுக்கு முழுமையாகப் பகிந்தளிக்கப்படல் வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் “வீடு’ சின்னத்தில் போட்டியிடவுள்ளன. இந்த ‘வீடு’ சின்னம் கடந்த காலங்களில் தோற்ற வரலாறு இல்லை. வெற்றியீட்டிய வரலாறே உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல தடவைகள் வடக்கு, கிழக்கில் அமோக வெற்றியீட்டியுள்ளது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல், 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல், 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் எனப் பல தேர்தல்களில் எமது கோரிக்கைகளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எமது வாக்களித்து எம்மை மாபெரும் வெற்றியடையச் செய்தார்கள்.

வடக்கு, கிழக்கில் இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வாக்குகளினால் தமிழ் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை

என்னிடம் இருக்கின்றது” என்றார்.