பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் த.தே.கூட்டமைப்பினை பலவீனப்படுத்த முயற்சி: கோவிந்தன் கருணாகரம்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்காக பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் சிலர் களமிறக்கப்பட்டிருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – சின்னஊறணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் பல கட்சிகள் இருந்தன. இன்று மூன்று கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அண்மையில் பிரிந்து சென்றிருக்கின்றன.

கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களினால் தமிழ் மக்களான எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டுமானால், சுதந்திரமான சுயாட்சியுடனான ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமானால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிற்க வேண்டிய தேர்தலாக இது அமைய வேண்டும்.

கடந்த காலங்களில் பலம் பொருந்திய ஒரு இனமாக நாங்கள் இந்த நாட்டில் இருந்தோம். அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் பலம் மிக்க ஒரு அமைப்பாக இருந்தோம். எமது இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இன்று இருக்கின்றோம்.

இன்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் ஒத்துழைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அந்த கொடுங்கோல் ஆட்சி மாற்றப்பட்டு நல்லாட்சியை கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நிலையில் இன்று எத்தனையோ பேர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள் தான் தமிழர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என படகிலும், யானையிலும், கையிலும் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆலோசனையின் கீழ் சுயேட்சையாகவும் தமிழ் மக்கள் மத்தியில் களம் இறங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்காக பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் இவர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான நிலையிலிருந்தது. இன்று சில சதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைவடையச் செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.

இம்முறை தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளுக்கு ஒரு பாடத்தினை புகட்டி அவர்களை மீளவும் கட்சிக்குள் வரவைப்பதற்கான ஒரு தேவை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.