மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்

70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி பாரதிபுரம் வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பல தேர்தல்களில், தமிழ்த் தேசிய விடுதலைக்காக தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக ஆணையைத் தந்திருக்கின்றார்கள்.

அதே ஆணையை இந்த முறை தேர்தலிலும் மீண்டும் வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணமானது பல காட்டிக்கொடுப்புகளுக்கும், கழுத்தறுப்புக்களுக்கும் மற்றும் துரோகங்களுக்கும் மத்தியிலேயே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருந்தது.

கடந்த 1983ஆம் ஆண்டுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு உடுத்தியிருந்த உடையுடன் இரவோடு இரவாக கிளிநொச்சி மக்கள் கலைக்கப்பட்டார்கள்.

இவர்கள், இனவிடுதலைப் போராட்டத்தை சுமந்த குழுமம் என்ற வகையில் எங்களுடைய மக்களின் வளர்ச்சியிலும்,பொருளாதார அபிவிருத்தியிலும் தேசிய விடுதலை என்ற பாத்திரத்தை கையிலெடுத்து பயணிக்கின்றோம்.

எங்களுக்கு மக்கள் தந்திருக்கின்ற ஆணையினையும், செய்தியினையும் தவறவிட்டாலோ அல்லது அதில் நழுவிச்சென்றாலோ வரலாறுகள் கூட எங்களை மன்னிக்காது, நாங்கள் இந்த அரசியல் பயணத்திலே ஒரு கட்சியாக பயணிக்கின்றோம்.

நீங்கள் கட்சிக்காக வாக்களித்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்கள் தந்த ஆணையை தவற விடாது சரியான பாதையில் எமது இனத்தின் விடுதலையை நோக்கி இந்தக் கட்சி பயணிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.