உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என கூறிய முதலமைச்சர் தனக்கு கீழ் உள்ள மாகாண அமைச்சர்களை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
முதலமைச்சர் அந்த பொறுப்பை தவறவிட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபையின் 115ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, விசேட கவனயீர்ப்பு ஒன்றைக் கொண்டு வந்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் இங்கு உரையாற்றுகையில்,
எனக்கான சீ.பி.ஜீ ஒதுக்கீட்டின் கீழ் 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வேலை திட்டங்கள் 2017ஆம் நிதியாண்டு முடிந்திருக்கும் நிலையிலும் செய்யப்படாமல் உள்ளது.
இது எனது நன்மதிப்பை கெடுப்பதற்கான வேலையாக நான் பார்க்கின்றேன், இது அமைச்சருடைய தவறு, மற்றைய உறுப்பினர்களுடைய வேலைத்திட்டங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னுடைய வேலைகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது.
இதற்கு என்ன காரணம் என்பதை முதலமைச்சரும், அவை தலைவரும் அறியவேண்டும், அமைச்சரால் அதிகாரிகளை கொண்டு வேலை செய்ய இயலவில்லை என்றால் அதிகாரிகளை மாற்றவேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் ஆட்களை பார்க்காமல், மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடியவர்களை தேர்வு செய்யுங்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் முதலமைச்சர் மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்களை தேர்வு செய்துள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டதாக எனக்கு கூறப்பட்டிருக்கின்றது, ஆனால் வேலைகள் முடிக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பாக ஆராய்ந்து, குறித்த அதிகாரிக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.