அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்த 15 குழந்தைகள்: வடமாகாண சபையில் ஞா.குணசீலன்

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் நடந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 115ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிரந்தரமான மகப்பேற்று நிபுணர் இல்லை. மத்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் பயனில்லை.

தாய்மாரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை எழுகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டிகளில் நடந்துள்ளன. மேலும் ஒரு கர்ப்பிணித்தாயை அவசர சிகிக்சைப் பிரிவில் வைத்து மயக்க மருந்து கொடுக்க முடியாமல் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை உருவானதாகவும் கூறியுள்ளார்.

அங்கே மயக்க மருந்து நிபுணரும் இல்லை. இவ்வாறு பருத்திதுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி போன்ற வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இல்லை.

இது தொடர்பாக பல தடவைகள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறியும் இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதல்வரிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்த போது அவர் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்தை கூறுவதற்கான நேரத்தை கேட்டு கொண்டிருக்கின்றார் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.