ஆட்சியை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்! சம்பந்தன் எச்சரிக்கை!

நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கு மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அது நடைபெறாவிட்டால், எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலையொட்டி திரு கோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் மீதான எதிர்பார்ப்புகள் பலவீனப்பட்டு வரும் நிலையில் சம்பந்தனின் இந்தக் கருத்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சுயாட்சி உரித்து உண்டு என்றும் அதனடிப்படையிலான ஓர் தீர்வைப் பெறுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது என்றும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றால் அல்லது கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசுகள் அந்த முயற்சிக்குத் தடையாக இருக்குமானால் அந்த ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை, நிலைமை ஏற்படும் என்ற சாரப்படவே சம்பந்தனின் உரை அமைந்திருந்தது.

புதிய அரசமைப்பு முயற்சிகளில் இருந்து தற்போதைய மைத்திரி – ரணில் கூட்டு ஆட்சி நழுவிச் செல்லுமானால் அந்த முயற்சியிலிருந்து விலகிச் செல்லுமானால் இந்த ஆட்சியைக் கவிழ்க்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயங்காது, எனவே புதிய அரசமைப்பை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

இருந்தாலும் இது அரசுக்கு விடுக்கப்பட்ட ஆணித்தரமான இறுதி எச்சரிக்கையாகக் கொள்ளப்படவேண்டிய அவசியம் எதனையும் அவரது ஒட்டுமொத்த உரையும் உணர்த்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – – ரணில் ஆட்சியை ஏற்படுத்தியதன் மூலம் தமிழர்களுக்குச் சில பல சாதகமான விடயங்கள் கிடைத்துள்ளன என்பதையும் அவர் தனது உரையில் முக்கியமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆக, அரசுக்கான அவரது காட்டமான எச்சரிக்கையாக இது அமையவில்லை. அத்தோடு இதேபோன்றதொரு கருத்தை இதற்கு முன்னரும் சில தடவைகள் சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றால் இந்த ஆட்சியையும் மாற்றத் தயங்கமாட்டோம் என்பதாக அது அமைந்திருந்தது. அதன் நீட்சியாகவே சம்பந்தனின் இந்தக் கருத்தையும் பார்க்க வேண்டும்.

எப்படியிருப்பினும் சம்பந்தனின் உரையெழுப்பும் முக்கிய கேள்வி, தற்போதைய ஆட்சிக்கான ஆதரவைக் கூட்டமைப்பு விலக்கிக் கொள்ளுமா இல்லையா என்பதல்ல. ஆட்சிகளை மாற்றுவதால் மட்டுமே கூட்டமைப்பால் இனப்பிரச்சினைக்கு, தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை கொண்டு வந்துவிட முடியுமா என்பதே அந்த முக்கிய கேள்வி.

ராஜபக்சவுக்குப் பதில் மைத்திரி – ரணில். இனி மைத்திரி – – ரணிலுக்குப் பதில் தனித்த ரணில் அல்லது வேறொருவர். அதற்குப் பின்னர் மற்றொருவர் என்று ஆட்சிகளை மாற்றுவதால் மட்டும் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்து விடாது என்பது நிச்சயம்.

தெற்கின் சிங்கள அரசியல் தலைமைகள் அனைத்துமே ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ ஆக இருக்கையில் ஆட்சிகளை மாற்றுவதால் மட்டும் எந்தவிதப் பயனும் தமிழர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் அரசியல் தீர்வு என்கிற தூண்டிலைப் பயன்படுத்தி தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களைக் கைவிடுவது மட்டுமே நடக்கக்கூடியது. நடந்தும் இருக்கிறது.

இப்படி ஆட்சிகளை மாற்றுவதாலும் மாறுகின்ற ஆட்சிகளுக்கு ஆதரவளிப்பதாலும் எதையும் சாதித்துவிட முடியாது என்பதற்கு ஜே.வி.பி. கட்சியே சிறந்த உதாரணம்.

சந்திரிகாவுக்கும், மகிந்தவுக்கும் பின்னர் மைத்திரிக்கும் என அது மாறி மாறி ஆதரவளித்து ஆட்சிகளை மாற்ற உதவியதன் மூலம் கட்சியை அரசியலில் தக்கவைத்துக் கொண்டதைத் தவிர வேறு எந்தவொரு விடயத்தையும் அந்தக் கட்சி சாதித்ததில்லை.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியும் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிகளை மாற்றுவது தான் என்றால் அதனால் உரிய பயன் ஏதும் விளையப் போவதில்லை என்பதை இப்போதே அடித்துக் கூறி விடலாம்.