யாதார்த்தத்தையும் நடைமுறையினையும் அறிந்து செயற்படவேண்டும்: துரைராஜசிங்கம்

யாதார்த்தத்தையும், நடைமுறையினையும் அறிந்துசெயற்படவேண்டும். சட்ட வல்லுனர்கள் எழுந்தமானமாக செயற்படுவது கவலைக்குரியது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 10ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதனின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவும், பரப்புரை கூட்டமும் இன்று மாலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விட்டுச்சென்றாலும் புதியவர்களை மக்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். யார் சென்றாலும் அவர்கள் கைவிடப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

மட்டக்களப்பு தொகுதியில் வாக்களிப்பு வீதம் குறைவாகவுள்ள நிலையிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவானோர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஆணையைப் பெற்றிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போது நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் விடுதலை என்னும் சொல்லுக்கான அடைவு புதிய அரசியலமைப்பு உருவாக்கமாகும்.

இந்த அரசியலமைப்பு ஆக்கத்திற்காக தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு தற்போது தான் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பலப்படுத்தவேண்டியது எமது கடமையாகும்.

நடைமுறையில் இல்லாத ஒரு சொர்க்கத்தினை காண்பதற்காக எங்களுடன் இருந்தவர்கள் என்னனென்ன காரணங்களினாலேயோ எங்களை விட்டு சென்றுவிட்டு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

இப்போது இடைக்கால அறிக்கையின் மாயையை உடைத்தெறிதல் என்ற மகுடத்தோடு ஒரு செயற்பாட்டினை தொடங்கியுள்ளார்கள்.இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.

நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இடைக்கால அறிக்கையில் வரவில்லையென்றால் அந்த விடயங்களை எவ்வாறு புகுத்துவது என்பது தொடர்பான பொறிமுறையை ஆராயவேண்டும்.

அவ்வாறான பொறிமுறைகள் அரசியலமைப்பு விடயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்னும் பலப்படுத்துவதாக அமையும்.

தமிழர் மீதும் தமிழனின் வரலாற்று மீதும் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதன் தலைமையுடன் நெருங்கிவந்து பேசவேண்டும்.தற்போது பேசுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.

தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இவர்களுக்கு இருக்குமானால் எந்த வழியிலாவது தொடர்புகொண்டிருக்க முடியும்.

மக்கள் அபிப்பிராயங்களைப் பெற்றவர்களினால் தான் அது சாத்தியமாகும். வெளியில் இருப்பவர்களினால் அரசியலமைப்பில் எதனையும் செய்யமுடியாது.

இவ்வாறானவர்கள் நடப்பியலை உணர்ந்து யதார்த்ததை உணர்வது மிகப்பெரிய கடமையாகும். மிகப்பெரும் சட்ட அறிஞர்கள் எல்லாம் இவ்வாறு வித்தியாசமாக செயற்படுவது அர்த்தமற்றது.

எமக்கு மிகப்பெரும் சக்தி இருக்குமானால் நாங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லமுடியும்.

எந்த நடைமுறையினை பின்பற்றலாம் என்பதை தனிமனித மான அவமானங்களை தள்ளிவைத்துவிட்டு தமிழ் சமூகத்தின் நல்வாழ்வு என்கின்ற விடயத்தினை மட்டும் கருத்தில்கொண்டு எவ்வாறு உச்சபயனை அடையமுடியும் என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டுமே தவிர வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிழைபிடித்துக்கொண்டு மாற்றுத்தலைமை என்பதை உச்சரித்துக்கொண்டிருப்பதனால் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.

ஏதாவது உங்களிடம் இருக்கவேண்டும். மாற்றுத்தலைமையென்றால் மாற்றுத்தலைமையொன்று இருக்கவேண்டும். இந்த அரசியல் திட்டத்திற்கு மாற்றான திட்டம் ஒன்றை இந்த நாடாளுமன்றம் ஊடாக நகர்த்தமுடியும் என்றால் அதனை செய்யவேண்டும்.

அவ்வாறு எதுவும் செய்யாமல் தற்போது செயற்படும் நிலைமையானது மிகவும் துக்கமான நிலைமை. தமிழ் மக்களை இன்னும் வேதனைக்குள் தள்ளும் நிலைமை. இவ்வாறு செயற்படுபவர்களை ஓரங்கட்டுவதை தவிர வேறு தெரிவு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண முன்னாள் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.