தீர்வு கிடைக்கா விடில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்? சுமந்திரன் எம் பி

புதிய அரசியல் அமைப்பில் தீர்வு கிடைக்காது விட்டால் நிச்சயம் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்றும் வெற்றியடைந்தாலும் எனது அரசியல் பயணத்தின் இறுதியாக இது இருக்கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும். அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.

அரசியல் அமைப்பினை மாற்றும் முயற்சியில் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தோல்விக்குப் பிறகு வேறு யாரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இரா.சம்பந்தன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவார். ஆனால், அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கு இடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியடைந்தாலும் அது எனது அரசியல் பயணத்தின் இறுதியாக இருக்கலாம் என்ற சிந்தனை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு முடிவாக நான் கூறவில்லை, அப்படியான சிந்தனையில் தான் இப்போது இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுமந்திரன் எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் சற்று புருவத்தை உயர்த்துவார்கள் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மேலும், இது ஈழத்தமிழர் அரசியலில் முன்னுதாரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.