இணையத்தளங்களில் வெளியான செய்தி, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்: எஸ்.வியாழேந்திரன்

தன்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வியாழேந்திரனின் வீடு தொடர்பாக முகநூல்கள் மற்றும் இணையத்தளங்களில் அண்மைய வெளியான செய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவ்வறிக்கையில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “தேர்தல் நடைபெற இருப்பதனால் கடந்த சில நாட்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிலர் போலியான முகப்புத்தகங்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பனவற்றில் எனது வீடு மற்றும் நிதிகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நாம் கடந்த காலங்களில் யாரையும் கடத்தி, கப்பம் வாங்கி, கொலை செய்து அல்லது எம்மக்களின் நிலங்களை விற்று சொத்துச் சேர்த்தவர்கள் அல்லர். அரசியலுக்கு வரும் முன் என்ன தொழில்களை செய்தோமோ அதைத்தான் இப்போதும் செய்கின்றோம். சொந்த உழைப்பில் கல்வி நிலையங்களையும், கல்லூரிகளையும் உருவாக்கியுள்ளோம். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இன்றுவரை இலவசமாக கற்பிக்கின்றேன்.

இன்று சில அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் நிதி மற்றும் சொத்துக்கள் உண்டு. அவர்கள் அதனை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. நாம் நூறு வீதம் உண்மையாக இருப்பதனால் வெளிப்படையாக உள்ளோம். இதுவரை நான் அநியாயமாக சம்பாதித்ததும் இல்லை சம்பாதிக்க போவதும் இல்லை. சிலர் தாங்கள் விளங்கியதை எழுதுகின்றார்கள். அவர்கள் உண்மைத் தன்மையினை புரிந்து கொண்டு எழுதுவதில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயற்படுபவர்கள் உண்மைக்கும், நீதிக்கும் உட்பட்டவர்கள் என்றால் என்னுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

இனிமேலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பிரசுரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.