கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு கோடியும் எதற்கானது தெரியுமா?: பா.அரியநேத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய 2 கோடி பணம் அபிவிருத்திக்காக செலவழிக்கப்பட்டதே தவிர அவர்கள் கை நீட்டி இலஞ்சமாக வாங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் த.கிருபைராசா என்பவரின் அலுவலகம் வாகனேரியில் இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கியதாக கூறுகின்றனர். ஆனால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கையில் பணம் வழங்குதில்லை.

இலங்கை அரசாங்கம் அபிவிருத்திக்கு ஒதுக்கும் நிதியை இவர்கள் அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்குவது தான் விடயம். இவர்கள் அதற்கான ஒருவர் பதினைந்து திட்டங்களை வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த திட்டத்தின் பணம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக எங்களது வரிப் பணத்தின் மூலம் வழங்கப்படுகின்றது. இது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொந்தக் பணம் அல்ல. சகல இடங்களுக்கு அபிவிருத்திக்கு வழங்கும் பணத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்து கொடுத்துள்னர். அந்த திட்டம் எமது மாவட்டத்திற்கு அபிவிருத்தியாக வந்துள்ளது.

இந்த பணம் அபிவிருத்திக்காக செலவழிக்கப்பட்டதே தவிர அவர்கள் கை நீட்டி இலஞ்சமாக வாங்கவில்லை. இதனை இலஞ்சப் பணம் என்பது சொல்வது முட்டாள்தனம். இதனை தேர்தல் பிரச்சாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.

வடகிழக்கு மண்ணில் இப்பணம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை அரசியலுக்காக இலஞ்சம் வாங்கியதாக கூறுகின்றனர். தேர்தலுக்காக மக்களை குழப்புகின்றனர். உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் மண்ணின் தலைவன் வெற்றி பெற்றதும் நீங்கள் அவரின் ஊடாக பல உதவிகளை பெற முடியும்.

தமிழினத்திற்கான, தமிழ் தேசியத்திற்காக கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.