தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்

தமிழர் தாயகத்தின் மக்கள் வாழ்விடங்களையும், மக்களுக்கான பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து அதில் இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்து நிலைகொண்டுள்ளமை இன்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழர்களாகிய எமக்கு ஒரு இன அடையாளம் உண்டு. எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துண்டு. ஆனால், அது இப்போதும் உள்ளதா என்பது கேள்வி என்றும், இனத்துக்கான விடுதலையை வேண்டி நாம் போராடி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

எமது போராட்டத்தின் ஒரு கட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர எமது போராட்டம் முடியவில்லை.

இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாமும் சுதந்திரமாக, சகல உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்குரிய நிலை ஏற்படும் வரை இன விடுதலைப் போராட்டம் தொடரும்.

ஆட்சி மாற்றப்பட்டுள்ள நிலையிலும் தமிழர்களுடைய வாழ்விடங்களையும், விளை நிலங்களையும் பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்துள்ளது.

இது வெறும் ஆட்சி மாற்றமே தவிர, அதே அடாவடிகளும் அடக்குமுறைகளும்தான் கடந்த ஆட்சியை போல தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்த நிலை மாற வேண்டும், தமிழர்களாகிய நாம் எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒரு இலக்கு நோக்கிச் செல்கின்றோம்.

அதனை தகர்ப்பதற்காக பல்வேறு சக்திகள் பல சதித்திட்டங்களைத் தீட்டிச் செயற்படுகின்றன. இன விடுதலையை வென்றெடுப்பதற்கும் தமிழர்களின் ஒற்றுமையே பெரும் பலமானதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே தமிழர்களுக்கான அரசியல் பலம் மிக்க சக்தியாக உள்ளது. இதனையும் அழித்துவிட்டால் தமிழர்களின் விடுதலையின் வீச்சுக் குறைக்கப்பட்டு விடும்.

இதேவேளை, இதற்கு தமிழர்களாகிய நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.