வரலாற்றை மறந்தவர்களுக்கு கூட்டமைப்பின் வியூகங்களை விளக்கி சம்பந்தன் சாட்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்யும் சிவசக்தி ஆனந்தன் அவர்களது வரலாற்றை மறந்துவிட்டு தரம் குறைந்த தாழ்வான விதத்தில் பேசுகிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசின் வரவு – செலவுத் திட்டத்தை நாங்கள் ஓர் அரசியல் வியூகத்துக்காகவே ஆதரித்தோம். அவற்றைப் பகிரங்கமாகச் சொல்ல முடியாது. ஆனால், நாடாளுமன்ற அந்தஸ்துக்கு தகுதியில்லாத வகையில் பேசுபவர்களுக்கு உரிய பதிலை எமது மக்கள் வழங்குவார்கள்.

சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூறுவது போல கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மட்டும் அந்த நிதி கிடைக்கவில்லை. கூட்டு எதிரணியைத் தவிர அனைத்து எம்.பிக்களுக்கும் அது வழங்கப்பட்டது.

நான் இந்த நிதியைப் பெறவில்லை. ஆனால், அபிவிருத்தித் திட்டங்கள் சிபாரிசு செய்யப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த நிதி அனைத்து எம்.பிக்களுக்கும் வழங்கப்பட்டன. இதில் கையூட்டோ அல்லது வேறு அர்த்தமோ கிடையாது.

வரவு – செலவுத் திட்டத்தை நாங்கள் ஆதரித்தமைக்கு ஓர் உள்நோக்கம் உள்ளது. அரசியலமைப்பு திருத்தமொன்றை எதிர்நோக்கி அது தொடர்பான கருமங்களை ஆற்றிவரும் எங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளது என்பதைக் காட்ட வேண்டிய தேவை உள்ளது.

அந்த அதிகார வல்லமை எங்களிடம் இருப்பதைக் கண்டு எதிர்தரப்புக்கள் பதற்றமடைய வேண்டும்.

அந்த அதிகாரத்தைக் கொண்டு எமது மக்களுக்குத் தேவையான தீர்வை சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எங்களுக்கு உள்ளது.

இந்த வியூகத்தை அல்லது எமது நுட்பமான அரசியல் நடவடிக்கைளைப் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

ஆனால், அரசியல் ஞானம் தரம் குறைந்த வகையில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களை கேவலமாகப் பேசுவது நாடாளுமன்ற அந்தஸ்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் கேவலமாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படிப் பேசுபவர்களின் சரித்திரம் என்ன என்பது பற்றி மக்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவற்றுக்கான பதிலை மக்கள் தேர்தலில் அவர்களுக்கு வழங்குவார்கள் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.