அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா? : சித்தார்தன்

இடைக்கால அறிக்கைகள் எல்லாம் சேர்த்து இறுதியாக அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற நிலை வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சுதந்திரத்திற்கு பிற்பாடு ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் உரிமை பறிப்பதிலும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் செய்வதற்கு பின்னணியில் நின்றிருக்கின்றார்கள் என்பதை மறக்க முடியாது.

அவ்வாறான கட்சியில் தமிழ் வேட்பாளர்கள் போட்டி போடுகின்றார்கள். இந்த இரண்டு கட்சியில் தமிழ் வேட்பாளர்கள் எடுக்கின்ற வாக்குகள் எல்லாமல் வடகிழக்கில் பெரிதாக வாக்குகளை பெற்று விட்டோம் என்று உலகத்திற்கு காட்டி தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல நாங்களும் தான் என்று உலகத்திற்கு காட்டுவதற்காக பல உதவிகளை வழங்கி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் கட்சிகள் அரசியலமைப்பு விடயத்தில் இடைக்கால அறிக்கையினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து விட்டது என்ற அடிப்படையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதுவரை இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை.

இது ஒரு விவாத அறிக்கை. இதற்கு பல இணைப்புக்கள் போடப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றைய குழுக்களுடைய அறிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் எல்லாம் சேர்த்து இறுதியாக அரசியலமைப்பு வருகின்ற போது அதை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற நிலையே வரும்.

நிச்சயமாக அந்த வரைவு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியாத வரைவாக இருந்தால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என்பதை தெரிவிக்கின்றேன்

பலமாக செல்லுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்த தேர்தலில் பலவீனப்படுத்தி விட்டால் இவை தடைப்பட்டு விடும் என்பதற்காகவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பலத்தை இழந்து செல்கின்றார்கள் என்று இலங்கை அரசும், சிங்கள கட்சிகளும் குழப்புவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.