எமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்

எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டுத் தீர்மானிப்போம். எமது பலத்தை ஒற்றுமையாய் ஓரணியில் நின்று வெளிப்படுத்துவோம் என பூநகரி கிராஞ்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பொன்னாவெளி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் த.ஜெயச்சித்திரா, மு.பெனடிற் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பூநகரிப் பிரதேசத்தின் பொன்னாவெளிப் பகுதிக்கென்றொரு தனிச் சிறப்பு உண்டு. இந்த கிராமத்திற்கான பிரதான வீதி முதற்கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு அதிகம் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கூட்டாளிகளாகவிருந்து அட்டகாசம் புரிந்து எமது பகுதியில் காட்டாட்சி நடத்தியவர்களுக்கு அபிவிருத்திக்காக பெருமளவான நிதி கிடைத்தது அப்போதே எமது பகுதிகளை அவர்களால் அபிவிருத்தி செய்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அப்போது எதுவும் செய்யாமல் இப்போது வருகிறார்கள் தமக்கு வாக்களியுங்கள் உங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றோம் என்று.

இப்படித்தான் எமது மக்களை அவர்கள் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். எமது மக்கள் ஏமாளிகளல்ல. தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தல்களில் எக்காலத்திலும் சோரம் போகாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களித்து தமது ஒற்றுமையை நிலைநாட்ட எமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முயற்சிப்பான்.

இந்த நாட்டிலே நாம் விடுதலையை வேண்டிப் போராடுகின்ற ஒரு இனம். எமக்கு அபிவிருத்தியும் வேண்டும் எமக்கான விடுதலையும் வேண்டும்.

நாம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடி ஆயுதம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாக கடந்த 30 வருட காலமாக ஆயுத வழியில் போராடி கடந்த 2009 இல் எமது ஆயுத வழிப் போராட்டமும் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது தேசியத் தலைவரால் தீர்க்கதரிசன சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற தமிழர்களின் அரசியல் பலம் மிக்க சக்தியின் மூலம் அரசியல் வழியில் போராடி வருகின்றோம்.

தமிழ் மக்கள் இவ்வொருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடப்படுகின்ற வாக்கு தமிழ் மக்களின் பலத்தை நிலை நிறுத்துவதுடன் எமது விடுதலைக்கான பயணத்திற்கும் வலுச் சேர்க்கும்.

எதிர்வரும் பத்தாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழனின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.