சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு!

தமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழரசுக் கட்சியின் அண்மைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தங்களது ஊழல்களையும் மோசடிகளையும் மறைப்பதற்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்மீது சேறடிக்கும் வேலையை சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றோர்களிடம் கையளிப்பதாகத் தெரிகிறது.

மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து தமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்துநிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்

வவுனியா நகரத்தில் மக்கள் தொடர்பு மற்றும் மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக அரச கட்டடம் ஒன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அது பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகமாகவே பணியாற்றி வருகின்றது.

வன்னி மாவட்ட மக்களுக்கு நன்கு பரிச்சயமான அலுவலகமாகவும் அது திகழ்ந்தது. இது இரகசியமான அலுவலமோ அல்லது இடமோ அல்ல. இதற்கும் புலனாய்வுத் துறைக்குமோ அல்லது இராணுவத்தினருக்குமோ எதுவிதத் தொடர்பும் கிடையாது. யாராவது சிலர் தனது பேச்சை நம்ப மாட்டார்களா என்று சுமந்திரன் கல்வெறிந்து பார்க்கின்றார்.

இரண்டாவதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்தது கிடையாது. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிக நிதியைக் காரணம்காட்டி நாம் எதிர்த்தே வாக்களித்து வந்துள்ளோம்.

ஆனால் பாதுகாப்பிற்கான செலவினங்கள் இப்பொழுதும் அதிகரித்தே காணப்படுகின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்ற கொள்கையில் நாம் மிகத் தெளிவாகவே இருக்கின்றோம். நாம் அத்தகைய வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.

ஆனால் வடக்கு-கிழக்கில் இராணுவம் காணிகளை விடுவிக்க வேண்டும், இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என்று கூறும் தமிழரசுக் கட்சியினர் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதியொதுக்கப்படும் வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த முரண்பட்ட தன்மை மக்களுக்குப் புரியாததொன்றல்ல.

கடந்த 01.02.2018அன்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் வடக்கு-கிழக்கில் 1000 புத்த விகாரைகள் கட்டுவதற்காக 600மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் இதனையும் உள்ளடக்கித்தான் உள்ளது. 1000 புத்தவிகாரைகள் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத்தான் தமிழரசுக் கட்சியினர் வரவு-செலவுத் திட்டததிற்கு வாக்களித்துள்ளனர்.

வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதென்ற அடிப்படையில் அபிவிருத்திக்கென இரண்டுகோடி ஒதுக்கப்பட்டதை சிறீதரன் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதாக இருந்தால் சிறீதரன் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சித்தார்த்தனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சிவசக்தி ஆனந்தனுக்கு அந்தத் தொகை ஒதுக்கப்படவில்லை. தானும் சம்பந்தனும் வாங்கவில்லை என்றும் அவ்வாறு வாங்கியதை நிரூபிக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். தான் பிரதமருடன் போராடித்தான் பெற்றுக்கொண்டேன் என்று சித்தார்த்தன் கூறுகிறார்.

இந்தச் சூழ்நிலையில், அபிவிருத்திக்காக இத்தொகை ஒதுக்கப்படுமாக இருந்தால் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக குழப்பகரமான விடயங்களைத் தெரிவிக்க வேண்டும்?

ஆகவே நாம் மீண்டும் கூறுகின்றோம் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக அபிவருத்தியை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக மாகாண சபைகள் தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகவும் சுமந்திரன் எம்மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

மாகாண சபையைப் பொறுத்தவரையில் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு முதலமைச்சரால் விசாரணை ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில் நால்வர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது.

ஐங்கரநேரன் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் எமது முடிவுகளுக்கு மாறாக, ஐங்கரநேசனை அமைச்சராக்கியதும் சுமந்திரனே.

எங்களது கட்சி முடிவுகளுக்கு மாறாக ஐங்கரநேரன் செயற்பட்டதால் அடுத்தகணமே அவருக்கும் எமது கட்சிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதை நாம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். ஆகவே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் சுமந்திரனே தவிர நாமல்ல.

இதேபோன்று வலிகாமம் கிழக்கு, வல்வட்டித்துறை பிரதேச நகரசபைகளும் ஊழல் காரணமாக கலைத்ததாக கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த இரண்டு சபைகளிலும் தமிழரசுக் கட்சியினர் ஈபிடிபியுடன் சேர்ந்து சபைகளை நடாத்தவிடாது முடக்கியதுடன், தவிசாளர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.

இதுகுறித்து விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும் அங்கு ஊழல்கள் நடைபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியினர் நிர்வாகத்தை முடக்குவதற்குத் தொடர்ந்தும் முயற்சித்ததால் சீரான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக நாமே அவ்விரு சபைகளையும் கலைப்பதற்குப் பரிந்துரைத்தோம்.

ஆகவே, நிலைமைகள் அவ்வாறிருக்க, தங்களது சபைகளுக்கு எதிராக களமிறங்கும் உறுப்பினர்களை சரியாக நெறிப்படுத்த முடியாத தமிழரசுக் கட்சியினர் இன்று எம்மீது விரல் நீட்டுகின்றனர்.

தமது வாதங்களை உண்மையென நம்பச் செய்ய சட்டத்தரணிகள் உண்மைகளை வளைப்பதும் உண்மைகளுக்கு எதிராக வாதாடுவதும் இயல்பானது. அதனையே சுமந்திரனும் செய்கின்றார். மக்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள். தேர்தல் முடிவுகள் இதனைத் துலாம்பரமாக வெளிப்படுத்தும் என்பதை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

மக்கள் மன்றம் நீதிமன்றமும் அல்ல. சட்டத்தரணிகள் வாதங்களைக் கேட்டு தீர்ப்பளிக்கும் இடமுமல்ல. மக்களே எமது எஜமானர்கள். அவர்கள் நடைபெறுவது அனைத்தையும் அறிந்தவர்கள். உரிய தீர்ப்பை வழங்கும்பொறுப்பை நாம் அவர்களிடமே விட்டுவிடுகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.