தமிழர்களுக்கான தீர்வு சமஷ்டி கட்டமைப்பிற்குள்! கிழக்கில் முழங்கிய துரைராசசிங்கம்

தமிழர்களுக்கான உரிமை, சமஷ்டிக் கட்டமைப்பு அல்லது கூட்டாட்சி என்ற அடிப்படையிலே பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் த.கிருபைராசா என்பவரின் அலுவலகம் வாகனேரியில் இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டு தமிழ் மக்கள் சிங்கள அரசுகளால் நசுக்கப்பட்டுக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்த விடயங்கள் எல்லாம் அனைவருக்கும் தெரியும்.

முதலில் குடியுரிமை, மொழியுரிமை என்று பறிக்கத் தொடங்கினார்கள். நாங்கள் தமிழனாக வாழ வேண்டும். தமிழர்களுடைய கலாச்சாரத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும், எங்களுடைய சமயத்தைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மொழி, இன, மதம், கலை கலாசார அடையாளங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.

எனவே முதலில் நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் உருவாக்கி எமது கொள்கைகளை மக்களுக்குச் சொன்ன போது மக்கள் அதற்காக ஆதரவளித்தார்கள். அந்த ஆதரவு தொடர்ச்சியாக எமது மக்களால் தரப்பட்டது. இதன் காரணமாக எமது வடகிழக்குப் பகுதியில் எமது மொழி பாதுகாக்கப்பட்டது.

நீர்கொழும்பு, சிலாபம், கதிர்காமம், காலி போன்ற இடங்களில் இருந்த எமது மொழி எங்கே? இது போன்று எமது பிரதேசங்களிலும் எமது மொழி, கலை கலாசார, பண்பாட்டை அழிக்க முற்படுகின்ற போது அதற்கு எதிராகச் செயற்படுவதுதான் எமது தன்மானம்.

எனவே எமது தன்மானத்தின் அடிப்படையிலே நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டுமாக இருந்தால் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாதவர்களாக நாங்கள் எமது கொள்கை கேட்பாடுகளின் அடிப்படையில் நாங்கள் தொடர்ச்சியாக வாழ வேண்டும்.

இந்தச் செயற்பாட்டினை எமக்கு தொடர்ச்சியாகச் செய்வதற்கான வாய்ப்பையும், வழிகாட்டலையும் செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதன் காரணமாகத் தான் எமது மக்கள் மொழியுரிமை கொண்டவர்களாகவும், இந்தப் பிரதேசத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.

முன்பு வந்த அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே ஆதரவளித்து வந்தார்கள். அதே போன்று இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பவர்களாக அதன் பின்னாலே தான் நிற்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் எமது மக்கள் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைத் தான் இந்தத் தேர்தலில் நாங்கள் இந்த அரசுக்கும் சர்வதேசத்திற்கும் காட்ட இருக்கின்றோம்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதன் மூலம் தான் தமிழர்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை தொடர்ச்சியாக எழுதுகின்ற நடவடிக்கையிலே தொடர்ச்சியான செயற்பாடுகளைச் செய்ய முடியும். அதற்கான பலத்தை எமது மக்கள் அளிக்க வேண்டும்.

தமிழர்களுக்கான உரிமை, சமஷ்டிக் கட்டமைப்பு அல்லது கூட்டாட்சி என்ற அடிப்படையிலே பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கொள்கையை அரசியலமைப்புச் சட்டத்தில் வரைய வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றது என்றார்.