பயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயங்கரவாதிகளை உருவாக்குகின்ற சட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்வரும் தேர்தலில் சிங்கள தேசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற வேண்டும் என்று மிகதீவிரமாக செயற்படுகின்றார். அவரிடத்தில் இல்லாத பணமா?

அடித்துக் கொண்ட பணங்கள், இந்த நாட்டிலே அவர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றங்கள், ஊழல்கள், குடும்ப ஆட்சி என்பன அவரிடம் காணப்படுகின்றன.

தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளதால் நான் அவர்களை நல்லாட்சி என்று வர்ணித்தது கிடையாது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயங்கரவாதிகளை உருவாக்குகின்ற சட்டம். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சர்வதேசத்தோடும், அரசாங்கத்தோடும் நாங்கள் இந்த அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.

சிறையில் இருந்தவர்கள் கனிசமான வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எங்களது முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.