வைரலாகும் யாழ். மூதாட்டியின் காணொளி!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரபரப்பாகியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

நாடு முழுவதும் தேர்தல் பிரசார கூட்டம் சூடுபிடித்துள்ளதுடன், ஒவ்வொரு பிரதான கட்சிகளும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தென்னிலங்கையில் ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், வடக்கில் இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புதிய கூட்டணிகள், பிளவுகள் என வடக்கு அரசியல் பரபரப்பாகியுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக லஞ்சக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடம் விலைப்போய் விட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளதுடன், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் என கடுமையான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மூதாட்டி ஒருவர் பிரபலமாகியுள்ளார். அவர் பேசியுள்ள காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் என கடுமையாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தான் எந்தவொரு சந்தர்பத்திலும், கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க போவதில்லை என அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கருத்து தெரிவிக்கையில், “நான் தமிழரசு கட்சிக்குதான் வாக்களிக்க இருக்கின்றேன். எனக்கு வாக்குரிமை கிடைத்த நாள் முதல் இன்றுவரையில் தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் வாக்களித்துள்ளேன்.

வீட்டில் தானே குடியிருக்கின்றோம். ஆகையினால் வீட்டு சின்னத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும். முச்சக்கர வண்டியில் சென்றாவது வீட்டுச்சின்னத்திற்கு தான் வாக்களிப்பேன்” என அந்த மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சமகால அரசியல் நிலைமையினையும, தமிழ் மக்களின் தேவையையும் உணர்ந்து குறித்த மூதாட்டி பேசியிருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மிகவும், பரபரப்பான நிலையில், குறித்த மூதாட்டி தற்போது பிரபலமாகியிருப்பதுடன், அந்த காணொளியும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.