2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா நிதி அபிவிருத்திக்காகவே வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை அரசின் ஆர்.டி.ஐஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபா பணம் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியே அன்றி இலஞ்சம் அல்ல என உறுதியாகியுள்ளது.

பொய்த்தது சிவசக்தி ஆனந்தனின் 2 கோடி இலஞ்சம்! தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாடளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்று கொண்டார்கள் என்ற சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் கூற்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் வவுனியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்திருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குத் தில் இருந்தால் தான் அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் வாங்கியதாகக் கூறுவதை நிரூபிக்குமாறும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிவசக்தி ஆனந்தனுக்குப் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் பலவற்றிலும் இவ்விடயம் பெரும் பூதாகரமாகப் பேசப்பட்டது. தற்போது இலங்கையில் என்ன நடந்தாலும் அதனை அறிந்துகொள்ளக் கூடிய தகவல் அறியும் சட்டம் நடைமுறையிலுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனது பதிலுக்கமைவாக ஊடகவியலாளர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுள்ளார்கள் என்ற சிவசக்தி ஆனந்தனின் கூற்றை அறிவதற்காக தகவல் அறியும் சட்ட மூல படிவத்தின் மூலம் குறித்த துறைசார் திணைக்களத்துக்கு விண்ணப்பித்து தகவல்களைப் பெற்றிருந்தனர்.

அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் எதனையும் பெறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தி நிதியே குறித்த திணைக்களங்களூடாக ஒதுக்கப்பட்டுள்ளன என்னும் விடயம் அதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுவது வழமையான ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது அவர்கள் குறிப்பிடுகின்றவர்களிடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களது வங்கிக்கணக்குக்களுக்கோ வழங்கப்படுவதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின், பிரதேசங்களின் அபிவிருத்தித் தேவை கருதி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை திட்டங்களாக முன்வைக்கப்படும் போது அதனை ஆராய்ந்து குறித்த துறைசார் திணைக்களங்களூடாக அரசாங்கமே நிதியை ஒதுக்கி அத்திணைக்களங்களின் துறைசார் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களின் துணையுடன் அவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இப்படியாக பிரதேச அபிவிருத்தி கருதி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கமைவாக ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்ற விடயங்களைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பெருமளவான மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதிகள் மிகமோசமாகப் பழுதடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி புனரமைக்கப்பட வேண்டியுள்ளதனைச் வலியுறுத்தி அண்மையில் துறைசார் அரசாங்க அமைச்சுக்குக் கடித மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இத்திட்டங்களும் எதிர்காலத்தில் மக்களின் தேவைகருத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசாங்கத்திடம் இலஞ்சம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் எனக்கூற முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலான கூட்டணியாகச் சேர்ந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வசைபாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.