ஆர்னோல்ட்டின் தெரிவினை ஏற்கிறாராம் சொலமன் சிறில்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபையின் முதல்வர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு நாம் கட்டுப்படுகின்றோம்.

-இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாநகரசபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான சொலமன் சூ.சிறில் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின்படி யாழ். மாநகரசபையில் பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டமைப்பு, நிர்வாக ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளதாகவும், அதனடிப்படையில் மாநகர முதல்வராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்ட் கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று முந்தினம் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பின் சார்பில் மாநகர முதல்வர் வேட்பாளராக ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலமையிலான சில உறுப்பினர்கள் இணைந்து சிறிலுக்கே முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கட்சி தலமைக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தனர் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.

ஆயினும் நேற்று முந்தினம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், யாழ் மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த சந்திப்பின் முடிவில் ஆனோல்ட்டை கட்சி முதல்வராக தெரிவு செய்ததாக சுமந்திரன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சிறிலிடம் கேட்ட போது, கட்சியின் முடிவே இறுதியானது, கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றார்.