துரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சிறீதரன் எம்.பி

தனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுநடத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்ற சுயேட்சைக்குழுவிடம் ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தவர்களோடு ஒன்று சேரவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

நாங்கள் ஒரு தனித்துவமான, ஆரோக்கியமான ஆட்சியொன்றை கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் அமைத்து மக்களுக்கான சேவையை நேர்த்தியாக வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைத்துவம் இவ்வாறான தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களுடன் ஆட்சியமைப்பதற்கு பங்காளர்களாக இணைப்பதற்கோ கேட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

கிளிநொச்சி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு தெரியாமல் அவ்வாறு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் கேட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆகவே இது தமிழ் மக்களை குழப்புகின்ற விதத்தில் தன்னுடைய அரசியல் வறுமையை போக்குவதற்காக தேர்தல் காலத்தில் எவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அவ்வாறான ஒரு செயற்பாடாகவே இதனை கருத வேண்டியிருக்கின்றது.

அவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கின்ற நம்பிக்கையீனமும் துரோக அரசியலில் இருந்து வெளி வருவதற்கும் மக்களை குழப்பும் வகையில் இவ்வாறான ஒரு பொய்யைக்குறிப்பட்டிருக்கின்றனர்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் கிராம ரீதியாக தனிநபர்கள் என்ற அடிப்படையில் எழுந்த வாக்குகளை வைத்துக்கொண்டு அதை அவர் தனக்கான வாக்கு என கருதலாம். அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்கள் அவருக்கு சரியான பாடத்தைப்புகட்டும்.

நாங்கள் எக்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் எங்களுடைய கொள்கைகளை இழந்து, கொள்கையற்றவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையில்லை.

நாங்கள் தூரநோக்கோடு, மிகத்தூய அரசியல் எண்ணங்களோடு, தூய கிராமங்களையும், கிளிநொச்சிக்கான தூய நகரத்தினையும் அமைப்பதற்கான செயற்பாட்டுத்திட்டங்களை வகுத்திருக்கின்றோம்.

அதை செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்யவிருக்கின்றோம். அதனைத்தடுக்கும் வகையிலும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

அவர்கள் தேர்தலுக்காக கொட்டிய பணமும், அவருக்குப்பின்னால் இருந்தவர்கள் கொடுத்த பொய்க்குற்றச்சாட்டுக்களும் இன்று மக்களுக்கு தெட்டத்தெளிவாக தெரிந்திருக்கின்றது.

அதிலிருந்து தான் தப்புவதற்காக பிழையான குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைப்பதற்கு முற்படுகின்றார்கள். தமிழ் மக்கள் எதிர்வருகின்ற தேர்தல்களில் இவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.

நாங்கள் எக்காலத்திலும் இவ்வாறான துரோகிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையில்லை. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் தனித்துவமான கொள்கையோடு மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கொண்டுநடத்துவோம்.

அதைக்குழப்புவதற்கு அவர்கள் முயற்சித்தால் அதற்குரிய சவால் நடவடிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கின்றோம். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களைக்கூட விலைக்கு வாங்குகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டதை அறியமுடிகின்றது.

ஆனால், அவை எதுவுமே சாத்தியப்படாது. கடந்த இரண்டரை வருடங்களுக்கு பின்னர் கரைச்சி பிரதேசபையினையும், நாற்பது வருடங்களுக்கு பின்னர் பச்சிலைப்பள்ளி, மற்றும் பூநகரி பிரதேச சபைகளையும் கையெலெடுத்திருக்கின்றோம்.

அவற்றைக்கொண்ட மக்களுக்கான சேவையாக மிக நேர்த்தியாக முன்னெடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.